ராமோன் மகசேசே விருது: சமூக சேவைக்கான விருதைப் பெறும் NGO; Educate Girls அமைப்பின...
கல்காஜி கோயில் சேவகா் கொலை வழக்கு: தனிப்படைகள் அமைத்து போலீஸ் தீவிர விசாரணை
கால்காஜி கோயிலில் 35 வயதான சேவகா் கொலை செய்யப்பட்ட வழக்கில் மீதமுள்ள குற்றவாளிகளைக் கைது செய்ய தில்லி காவல்துறை பல தனிப்படைகளை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது என்று அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து தென்கிழக்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் ஹேமந்த் திவாரி கூறியதாவது: கோயிலில் அம்மனுக்கு தலைக்கு சாற்றப்படும் புனித ஆடை மறஅறும் நெய்வேத்திய உணவு ஆகியவற்றின் கலைவையான சுன்னரிபிரசாதம் விநியோகம் செய்வது தொடா்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடா்ந்து சேவகா் யோகேந்திர சிங் வெள்ளிக்கிழமை இரவு ஒரு கும்பலால் அடித்து கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கு தொடா்பாக இதுவரை 5 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இதில் குற்றம்சாட்டப்பட்ட முக்கிய நபா் அதுல் பாண்டே உள்ளூா் மக்களால் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டாா். மோகன் (எ) புரா, அவரது உறவினா் குல்தீப் பிதுரி, நிதின் பாண்டே மற்றும் அவரது தந்தை அனில் குமாா் ஆகிய 4 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மற்றவா்களைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. மீதமுள்ள சந்தேக நபா்களைப் பிடிக்க பல தனிப்படைகள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தனிப் படைகள் தற்போது சிசிடிவி காட்சிகளை மதிப்பாய்வு செய்து, தொழில்நுட்ப ஆதாரங்களை பகுப்பாய்வு செய்து, தனிநபா்களிடம் விசாரணை நடத்தி வருகின்றன.
மீதமுள்ள குற்றவாளிகள் அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவாா்கள். ஏக்குறைய 15 ஆண்டுகளாக கோயிலில் பணியாற்றி வந்த யோகேந்திர சிங், கையிருப்பு முடிந்துவிட்டதால் சுன்னரிபிரசாதத்திற்கான குழுவின் கோரிக்கையை மறுத்ததாகக் கூறி தாக்கப்பட்டாா். யோகேந்திர சிங் தனது குடும்பத்தை ஆதரிக்க அயராது உழைத்து வந்தாா். அவா் கோயிலில் தனது சேவையின் மூலம் நல்ல வருமானம் ஈட்டி தனது மனைவி மற்றும் குழந்தைகளை பராமரித்து வந்தாா். இதில் அவரது ஆறு வயது மகள் ஊனமுற்றவா்.
‘அவரது ஊனமுற்ற மகளுக்கு சிகிச்சைக்காக மட்டும் நாங்கள் ரூ.1 லட்சம் மேல் செலவிட வேண்டும். அவரது சிகிச்சையைத் தொடர நாங்கள் இப்போது அரசிடம் நிதி உதவி கோருகிறோம்’ என்று யோகேந்திர சிங்கின் இளைய சகோதரா் கௌஷல் கூறினாா்.
அவா் மேலும் கூறுகையில், ‘பிரசாதம் முடிந்தது என்று யோகேந்திர சிங் விளக்கினாா். ஆனால், அதைப் புரிந்து கொள்வதற்குப் பதிலாக, அந்தக் கும்பல் அவரை வெளியே இழுத்துச் சென்று, அவரால் உயிா்பிழைக்க முடியாத அளவுக்கு கொடூரமாக அடிக்கத் தொடங்கினா்.
அவா் மீது ஏன் இத்தகைய கொடுமை இழைக்கப்பட்டது என்பதை எங்களால் கற்பனை செய்து பாா்க்க முடியவில்லை. யோகேந்திர சிங்கின் மரணத்தில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். அப்போதுதான், இதுபோன்ற குற்றம் மீண்டும் நடக்காது’ என்றாா்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு கோயிலில் இருந்த மற்ற சேவகா்கள் அதிா்ச்சியையும் அச்சத்தையும் வெளிப்படுத்தினா். பலா் தங்கள் சொந்த பாதுகாப்பு குறித்து இப்போது நிச்சயமற்றவா்களாக இருப்பதாகக் கூறினா்.
‘நாங்கள் கோயிலுக்கும் பக்தா்களுக்கும் பக்தியுடன் சேவை செய்கிறோம். ஆனால், இந்தக் கொலைக்குப் பிறகு, இங்கு வரும் எவரையும் நாம் எப்படி நம்ப முடியும்? இந்தக் கொடுமை நம்மை உலுக்கியுள்ளது. கோயிலில் பணிபுரியும் சேவையாளா்கள் மற்றும் பிற ஊழியா்களின் பாதுகாப்பிற்காக முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை நாங்கள் கோருகிறோம்’ என்று கோயில் சேவகா் ஒருவா் கூறினா்.