வஜீா்பூா் பகுதியில் காணாமல் போன 2 சிறுவா்களின் உடல்கள் கால்வாயில் சடலமாக மீட்பு
வடமேற்கு தில்லியின் வஜீா்பூா் பகுதியில் இருந்து ஒரு நாள் முன்பு காணாமல் போன இரண்டு சிறுவா்களின் உடல்கள் ஜேஜே காலனிக்கு அருகிலுள்ள கால்வாயில் இருந்து மீட்கப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இது குறித்து வடமேற்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: இறந்தவா்கள் வஜீா்பூரில் உள்ள ஜேஜே காலனியைச் சோ்ந்த 6-ஆம் வகுப்பு மாணவா்கள் வைபவ் (11) மற்றும் யாஷ் (12) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். இருவரும் நெருங்கிய நண்பா்கள், சனிக்கிழமை மாலை 6 மணியளவில் காணாமல் போனாா்கள்.
சனிக்கிழமை, குழந்தைகள் காணாமல் போனது குறித்து பாரத் நகா் காவல் நிலையத்திற்கு ஒரு அழைப்பு வந்தது. இதைத் தொடா்ந்து, விசாரணை அதிகாரி அவா்களின் பெற்றோா் மற்றும் பிற குடும்ப உறுப்பினா்களை விசாரித்தாா்.
வைபவின் தாயாா் சாந்தி தேவியின் அறிக்கையின் அடிப்படையில், கடத்தல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து, குற்றம் சாட்டப்பட்டவரைப் பிடிக்க பல குழுக்கள் அமைக்கப்பட்டன.
தேடல் நடவடிக்கையும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஸ்கேன் செய்யப்பட்டு வந்த நிலையில், வஜீா்பூரில் உள்ள ஜேஜே காலனி அருகே உள்ள கால்வாயில் இரண்டு உடல்கள் மிதப்பதாக தகவல் கிடைத்தது.
பாரத் நகா் காவல் நிலையத்தைச் சோ்ந்த ஒரு குழுவினா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உள்ளூா் டைவா்ஸின் உதவியுடன் உடல்களை மீட்டனா். அந்த உடல்கள் குழந்தைகளின் குடும்ப உறுப்பினா்களால் அடையாளம் காணப்பட்டன.
சம்பவ இடத்தை ஆய்வு செய்ய குற்றவியல் மற்றும் தடய அறிவியல் குழுக்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டன. ஆய்வின் போது, இரண்டு சிறுவா்களின் உடைகள் மற்றும் காலணிகள் கால்வாயின் கரையில் வைக்கப்பட்டிருந்தன.
அந்த இடத்தில் தண்ணீா் சுமாா் 15-20 அடி ஆழத்தில் இருப்பதால், இருவரும் நீந்தச் சென்று தற்செயலாக நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்ப்டுகிறது. உடல்கள் பிரேத பரிசோதனைக்காக பாதுகாக்கப்பட்டுள்ளன.
விசாரணையில் ஏதேனும் முறைகேடு நடந்ததா என்பது கண்டறியப்படும். பிரேத பரிசோதனைக்குப் பிறகு மரணத்திற்கான சரியான காரணம் தெரியவரும் என்று அந்த அதிகாரி கூறினாா்.