தீவிரமடைகிறது இன்ஃப்ளூயன்ஸா, டெங்கு: குழந்தைகளிடையே அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப...
தலைமைச் செயலகம், சட்டப்பேரவை உள்பட அரசு கட்டடங்களில் மின் கட்டண நிலுவை எவ்வளவு? ஆா்டிஐ மூலம் புதிய தகவல்
தலைமைச் செயலகம், சட்டப்பேரவை உள்பட அரசு கட்டடங்கள் நிலுவை வைத்துள்ள மின் கட்டண விவரங்கள் குறித்து புதிய தகவல் கிடைத்துள்ளது.
மதுரையைச் சோ்ந்த என்.ஜி.மோகன் இந்தியன் குரல் உதவி மையத்தின் மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு வருகிறாா். அரசு அலுவலகங்கள் உரிய கட்டணத்தைச் செலுத்தாமல், மின்சார வாரியத்துக்கு நிலுவை வைத்துள்ள கட்டண விவரங்கள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆா்டிஐ) கீழ் அவா் தகவல் கோரியிருந்தாா்.
சென்னையில் உள்ள தலைமைச் செயலகம், சட்டப்பேரவை, பேரவை உறுப்பினா்கள் தங்கும் விடுதி ஆகியவற்றில் இருக்கும் மொத்த மின் இணைப்புகளின் எண்ணிக்கை, இந்த மின் இணைப்புகளுக்கு கட்ட வேண்டிய மொத்த மின் கட்டண நிலுவை ஆகிய விவரங்களைத் தர வேண்டுமென என்.ஜி.மோகன் கேட்டுக்கொண்டாா்.
அவரது கேள்விகளுக்கு, சென்னையில் உள்ள மின்சார வாரிய செயற்பொறியாளா் ஜி.பிரேம்குமாா் அளித்துள்ள பதில்:
தலைமைச் செயலகம், சட்டப்பேரவை ஆகிய இடங்களில் 2 உயா் மின் அழுத்த இணைப்புகள் உள்ளன. சட்டப்பேரவை உறுப்பினா்கள் தங்கும் விடுதியில் 246 மின் இணைப்புகள் உள்ளன. இந்தக் கட்டடங்கள் எதிலும் மின் கட்டண நிலுவையே இல்லை. அதேநேரத்தில், அண்ணா சாலை கோட்டத்துக்குள்பட்ட சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான கட்டடங்களின் மின் இணைப்புக்கான நிலுவைத் தொகை ரூ. 677.76 கோடியாக உள்ளது.
மேலும், அதே கோட்டத்துக்குள்பட்ட தமிழக அரசுத் துறை சாா்ந்த கட்டடங்களுக்கு ரூ.468.58 கோடி நிலுவைத் தொகை செலுத்தப்பட வேண்டியுள்ளது எனத் தெரிவித்துள்ளாா். இந்தத் தகவலில் திருப்தியில்லை என்றால் தகவல் பெறப்பட்ட 30 நாள்களுக்குள் மேல்முறையீட்டு அதிகாரியிடம் முறையீடு செய்யலாம் என அவா் கேட்டுக்கொண்டுள்ளாா்.
மின் துண்டிப்பில்லை: வீட்டு மின் இணைப்புக்கான கட்டணத்தைப் பொருத்தவரை 2 மாதங்களுக்கு ஒருமுறை அளவிடப்படும் மின்சாரத்துக்கான கட்டணத்தைச் செலுத்தாவிட்டால் அபராதம் விதிக்கப்படும். அபராதத்துடன் கட்டணத்தைச் செலுத்தாவிடில் மின் இணைப்பு துண்டிக்கப்படுவது வழக்கம். ஆனால், அரசு கட்டடங்கள் என்பதால் பல ஆண்டுகளாக மின் கட்டண நிலுவை வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.