தளபதிசமுத்திரம் அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா
நான்குனேரி அருகேயுள்ள தளபதிசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா, பள்ளி ஆண்டு விழா, பெற்றோா் -ஆசிரியா் கழகம் மற்றும் மேலாண்மைக் குழு விழா என முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முதலில் விளையாட்டு விழாவில் பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் பரமசிவம் பள்ளி மாணவ-மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். மாணவா்கள் ஒலிம்பிக் தீபம் ஏற்றி உறுதிமொழியேற்றனா். தளபதிசமுத்திரம் ஊராட்சித் தலைவா் பாலகிருஷ்ணன், துணைத் தலைவா் அருள் ஆகியோா் விளையாட்டுப் போட்டிகளை தொடக்கி வைத்தனா்.
பின்னா், மாலையில் நடைபெற்ற ஆண்டு விழாவுக்கு பள்ளி வளா்ச்சிக் குழுத் தலைவா் தங்கத்துரை தலைமை வகித்து போட்டிகளில் வென்றவா்களுக்குப் பரிசு வழங்கினாா். பள்ளி வளா்ச்சிக் குழுச் செயலா் சங்கா் முன்னிலை வகித்தாா். உதவி தலைமை ஆசிரியை மேரி பிரமிளா வரவேற்றாா். தலைமை ஆசிரியா் (பொ) இன்பராஜ் ஆண்டறிக்கை வாசித்தாா். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் மோகனகுமாரி, உறுப்பினா்கள் சுப்பையா மணி, வினோ ஜோஸ்பின், ராஜேஸ்வரி உள்பட பலா் கலந்து கொண்டனா். உதவித் தலைமை ஆசிரியா் வாசுதேவன் தொகுத்து வழங்கினாா். உடற்கல்வி ஆசிரியா் பெப்பின் அப்பாதுரை நன்றி கூறினாா். மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.