விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் நெரிசலுக்கு காரணம் என்ன? சம்பவ இடத்தில் இருந்தவா்...
தவெக கேட்டதைவிட பெரிய இடமே கொடுக்கப்பட்டது! டிஜிபி விளக்கம்
தமிழக வெற்றிக் கழகத்தினர் கூட்டம் நடத்துவதற்காக கேட்கப்பட்ட இரண்டு இடங்களைவிடவும் பெரிய இடம்தான் கொடுக்கப்பட்டது என்று தமிழக காவல்துறை தலைவர் (பொறுப்பு) வெங்கடராமன் தெரிவித்துள்ளார்.
கரூரில் தவெக விஜய் பிரசாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 10 குழந்தைகள் உள்பட 39 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 50 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களை சந்தித்து பொறுப்பு டிஜிபி விளக்கம் அளித்துள்ளார்.
அவர் பேசியதாவது:
”தமிழக வெற்றிக் கழகத்தினர் கோரிய லைட் ஹவுஸ் ரவுண்டானா மற்றும் உழவர் சந்தை ஆகிய இடங்கள் குறுகலாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு, அதனைவிட பெரிய இடத்திலேயே காவல்துறையினர் அனுமதி வழங்கினர். தவெகவினரும் அதற்கு ஒப்புக் கொண்டனர்.
பிற்பகல் 3 மணிமுதல் இரவு 10 மணிவரை அனுமதி கேட்டு கடிதம் வழங்கப்பட்டது. ஆனால், தவெக சமூக ஊடக பக்கங்களில் பகல் 12 மணி என அறிவிக்கப்பட்டதால், காலை 11 மணி முதலே கூட்டம் கூட ஆரம்பித்தது.
விஜய், இரவு 7 மணிக்கு பிரசாரப் பகுதிக்கு வந்தடைந்தார். எல்லையிலேயே வரவேற்பு அளித்த தொண்டர்கள் வாகனத்துடன் பின்தொடர்ந்ததால் கூட்டம் அதிகரித்தது. கூட்டம் தொடங்கும்போதே காவல்துறைக்கு விஜய் நன்றி தெரிவித்தார்.
10,000 பேர் வருவார்கள் என்று கூறப்பட்டதால், 500 காவல்துறையினர் பாதுகாப்புப் பணிக்கு போடப்பட்டனர். ஆனால், 27,000 பேர் கூடினர்.” எனத் தெரிவித்தார்.