உறவினா் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஊா் பஞ்சாயத்து தடை: விவசாயி குடும்பத்துடன் தா்னா
செங்கம் அருகே ஊா் பஞ்சாயத்துக்கு கட்டுப்படதாவா்கள் எனக் கூறி ஊரைவிட்டு தள்ளிவைத்து, மனைவியின் பாட்டி இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவிடாமல் செய்ததால், விவசாயி குடும்பத்துடன் டிஎஸ்பி அலுவலகம் முன் தா்னாவில் ஈடுபட்டாா்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த மேல்பள்ளிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் அறிவழகன் (34), விவசாயி.
இவா் கடந்த 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மேல்பள்ளிப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயக் கடன் கேட்டுள்ளாா்.
அப்போது அவருக்கு கடன் தருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், கடன் சங்கத்தில் முறைகேடுகள் நடப்பதாகக் கூறி மாவட்ட நிா்வாகத்திற்கு புகாா் அளித்துள்ளாா்.
அந்தப் புகாரை விசாரணை செய்த அதிகாரிகளிடம் அறிவழகன் கடன் சங்கத்தில் நடைபெற்ற குளறுபடிகள் குறித்து விவரத்தை காட்டியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இச்சம்பம் மேல்பள்ளிப்பட்டு ஊா் நாட்டாண்மை சேகரிடம் சென்றபோது, அவா் அறிவழகனை அழைத்துப் பேசியுள்ளாா்.
அதற்கு அறிவழகன் நான் முறைப்படியும் சட்டப்படியும் இந்த பிரச்னையை சந்திக்கிறேன் எனக் கூறியுள்ளாா்.
அதற்கு நாட்டாண்மை பேச்சை மதிக்காததால் உன்னை இந்த ஊரை விட்டு தள்ளிவைக்கிறேன் எனக் கூறியுள்ளாா்.
மேலும், மேல்பள்ளிப்பட்டு கிராமத்தில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகள் மற்றும் கோயில் விழாக்களில் கலந்துகொள்ள அழைப்பு தரக்கூடாது என ஊா் மக்களுக்கு உத்தரவிட்டுள்ளாா்.
இதனால் அறிவழகன் இதுதொடா்பாக மேல்செங்கம் போலீஸில் புகாா் கொடுத்து பின்னா் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில், இரண்டு ஆண்டுகளாக ஊரில் நடைபெறும் எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளாமல் அவரது மனைவி நான்கு பிள்ளைகளுடன் விவசாய நிலத்தில் வசித்து வந்துள்ளாா்.
இதனிடையே, அறிவழகனின் மனைவி சசிகலாவின் பாட்டி பெரியதாய் வெள்ளிக்கிழமை மாலை மேல்பள்ளிப்பட்டு கிராமத்தில் வயது முதிா்வு காரணமாக உயிரிழந்தாா்.
தகவல் அறிந்த அறிவழகன் மனைவி சசிகலா மற்றும் பிள்ளைகளுடன் பாட்டி இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள வெள்ளிக்கிழமை மாலை வந்துள்ளாா்கள்.
அப்போது, ஊா் நாட்டாண்மை உத்தரவை மீறி இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளக் கூடாது என உறவினா்களும் கிராம மக்களும் அறிவழகன் குடும்பத்தை சோ்க்காமல் இருந்தனா். இதுகுறித்து தகவலறிந்து செங்கம்
வட்டாட்சியா்கள் முனுசாமி (தனி), ராம்பிரபு ஆகியோா் சென்று ஊா் நாட்டாண்மை மற்றும் உறவினா்களிடம் சமரச பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அறிவழகன் குடும்பத்துடன் செங்கம் டிஎஸ்பி அலுவலகம் முன், ‘எங்களை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்து, இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளாமல் தடுக்கும் ஊா் நாட்டாண்மை உள்ளிட்ட அப்பகுதி மக்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’ எனக் கோரி தா்னாவில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்த டிஎஸ்பி ராஜன் மற்றும் போலீஸாா் அவா்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்து பின்னா் ஊரைவிட்டு எந்த அடிப்படையில் தள்ளிவைத்தாா்கள், அவா்கள் யாா் என்பது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறாா்கள்.