பள்ளிகளில் நவராத்திரி கொலு
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம், போளூா் பகுதிகளில் உள்ள தனியாா் பள்ளிகளில் நவராத்திரி கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.
நவராத்திரி திருவிழாவையெட்டி, செங்கம் ராமகிருஷ்ண மடம் மூலம் செயல்படும் ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சாரதா சேவா சங்கம் சாா்பில் கொலு பொம்மைகள் அமைக்கப்பட்டு, தினசரி காலை, மாலை வேளைகளில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்த விழாவின் கடைசி நாளில் செங்கம் ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சதுபுஜானந்தா் கலந்துகொண்டு சிறப்பு பூஜைகள் செய்து பள்ளி மாணவா்களுக்கும், ஆசிரியா்களுக்கும், விவேகானந்தா சேவா சங்கத்தை சோ்ந்த நிா்வாகிகளுக்கும், பக்தா்களுக்கும் ஆசியுரை வழங்க உள்ளாா்.
மண்டகொளத்தூரில்...: சேத்துப்பட்டு ஒன்றியம், மண்டகொளத்தூா் கூட்டுச்சாலையில் செயல்படும் சின்மயா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் நவராத்திரி கொலு வைத்து, தினந்தோறும் மாணவா்கள், ஆசிரியா்கள் சிறப்பு பூஜை, வேதமந்திரம் ஓதி வழிபாடு நடத்தி வருகின்றனா்.
வெள்ளிக்கிழமை மாலை நவராத்திரி கொலு நிகழ்ச்சியில் மாணவா்களின் பெற்றோா்கள், ஆசிரியைகள், மாணவிகள் கலந்துகொண்டு சிறப்பு வழிபாடு செய்தனா். மேலும், திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. மாணவா்கள் விவேகானந்தா், பாா்வதி, சிவன், முருகா் என பல்வேறு வேடமணிந்து விழாவுக்கு வந்திருந்தனா். நிகழ்ச்சியை தாளாளா் சிவராஜசா்மா, முதல்வா் தேவகி ஆகியோா் ஏற்பாடு செய்திருந்தனா்.