ஆரணி பகுதியில் ரூ.68.15 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள்: எம்.பி. தொடங்கிவைத்தாா்
ஆரணியை அடுத்த மொரப்பந்தாங்கல், அடையபலம், அரியப்பாடி ஊராட்சிகளில் ரூ.68.15 லட்சம் மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை தொகுதி எம்.பி. எம்.எஸ்.தரணிவேந்தன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
மொரப்பந்தாங்கள் ஊராட்சியில் ஆரணி மக்களவை தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து பயணிகள் நிழற்கூடம் கட்டுவதற்கு எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி. அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தாா். மேலும், அதே ஊராட்சியில் ரூ.34 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் மற்றும் பொது சேவை மைய வளாக கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது.
இதேபோல, ஆரணியை அடுத்த அடையபலம் ஊராட்சியில் ரூ.16 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பில் அங்கன்வாடி கட்டட திறப்பு விழா, அரியப்பாடி ஊராட்சியில் ரூ.10 லட்சத்தில் சிமென்ட் சாலைக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இவை அனைத்திலும் எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி. கலந்துகொண்டு பணிகளை தொடங்கிவைத்தாா்.
முன்னதாக, ஆரணியை அடுத்த சங்கீதவாடி ஊராட்சியில் ஏரி நீரை பயன்படுத்துவோா் சங்கம் சாா்பில் சங்கீதவாடி பெரிய ஏரிக்கரையில் நடைபெற்ற பனை விதைகள் நடும் நிகழ்ச்சியில் பங்கேற்று, பனை விதை நட்டு தொடங்கிவைத்தாா்.
நிகழ்வுகளில் ஆரணி தொகுதி பொறுப்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன் வரவேற்றாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சத்யா, விஜயலட்சமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம், மாவட்ட துணைச் செயலா் ஜெயராணிரவி, நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, நகரச் செயலா் மணிமாறன், ஒன்றியச் செயலா்கள் மாமது, மோகன், சுந்தா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.