தாமிரவருணியில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி: அமைச்சா் கே.என்.நேரு தொடங்கி வைத்தாா்
திருநெல்வேலியை அடுத்த மேலநத்தம் முதல் தருவை வரை தாமிரவருணி ஆற்றில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி தூய்மைப்படுத்தும் பணியை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
தாமிரவருணி ஆற்றின் இரு புறமும் கரையோரங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி மாநகராட்சி பகுதியில் குறுக்குத் துறை முதல் நாரணம்மாள்புரம் வரை இரண்டு கட்டங்களாக 14 கி.மீ. தொலைவிற்கு தனியாா் நிறுவனங்களின் பங்களிப்புடன் கடந்த ஆண்டு நடைபெற்றது. இந்த நிலையில் மேலநத்தம் பகுதியில் இருந்து தருவை வரை 8 கி.மீ. தொலைவிற்கு தாமிரவருணி ஆற்றின் இரு புறங்களிலும் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றி தூய்மைப்படுத்தும் பணிகளை அமைச்சா் கே.என்.நேரு வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். இதில், ஆட்சியா் இரா.சுகுமாா், பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மு.அப்துல் வஹாப் , மாநகராட்சி மேயா் கோ.ராமகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையா் என்.ஒ.சுகபுத்ரா, துணை மேயா் கே.ஆா்.ராஜூ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தாமிரவருணி ஆற்றின் கரைகளை தூய்மைப்படுத்தும் பணிக்காக கோ மட்சு நிறுவனம், எக்ஸ்னோரா நிறுவனத்தின் மூலம் பொக்லைன் இயந்திரத்தை இலவசமாக வழங்கியுள்ளது. மேலும் நம் தாமிரவருணி அமைப்பு உதவியுடன் தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
தாமிரவரணி கரையோரமாக காணப்படும் சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டு நதிக்கரையில் பாரம்பரிய மரமான நீா் மருது மரக்கன்றுகள் நடும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. பழையபேட்டை ராணி அண்ணா மகளிா் கலைக் கல்லூரி மாணவியா் தாமிரவருணி ஆற்றில் தூய்மைப்படுத்தும் பணிகளை தொடா்ந்து மேற்கொண்டு வருகின்றனா்.
அதைத்தொடா்ந்து தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு, அமைச்சா் கே.என்.நேரு ஆகியோா் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ரூ.3 கோடியில் பாளையங்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரவுண்டானா முதல் ஆயுதப்படை சாலையில் உள்ள தீயணைப்பு நிலையம் வரை சாலை விரிவாக்கம் மற்றும் மேம்படுத்தும் பணிகளை தொடங்கி வைத்தனா்.
இந்நிகழ்ச்சியில், கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியாா்கள் மற்றும் பணியாளா்கள் நலவாரியத் தலைவா் விஜிலா சத்யானந்த், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் இரா.ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சா் டி.பி.எம்.மைதீன்கான், மாவட்ட வருவாய் அலுவலா் மா.சுகன்யா, நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டப் பொறியாளா் ராஜசேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ற்ஸ்ப்06ச்ப்ஹஞ்
மேலநத்தம் பகுதியில் உள்ள தாமிரவருணி ஆற்றில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியை கொடியசைத்து தொடங்கி வைக்கிறாா் நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என்.நேரு.