குழித்துறை நகராட்சியில் இன்று கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு
தமிழகத்தில் 2ஆவதாக குழித்துறை நகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் வெள்ளிக்கிழமைமுதல் (மாா்ச் 7) செயல்பாட்டுக்கு வரவுள்ளது.
இதுகுறித்து குழித்துறை நகா்மன்றத் தலைவா் பொன். ஆசைத்தம்பி கூறியது: தமிழகம் முழுவதுமுள்ள நகராட்சிகளில் கழிவுகளை சுத்திகரிப்பது குறித்து அரசிடமிருந்து கோரிக்கை வந்தபோது, குழித்துறை நகராட்சிக்கு சொந்தமான 50 சென்ட் இடத்தை ஒதுக்கிக் கொடுத்தோம். இங்கு செப்டிக் டேங்க் கழிவுகள், மனிதக் கழிவுகள், கழிவுநீா் ஆகியவற்றை சுத்திகரிக்கும் வகையில் நவீன இயந்திரங்கள் பொருத்தப்பட்டு 5-க்கும் மேற்பட்ட செப்டிக் டேங்க், 2 பில்டா்களுடன் பிரம்மாண்டமான சுத்திகரிப்பு நிலையம் அமைக்க 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 3.40 கோடி நிதி ஒதுக்கப்பட்டு எனது தலைமையில் பணி தொடங்கியது. தற்போது பணி நிறைவடைந்து சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இந்த நிலையத்தில் கழிவுகளைப் பிரித்தெடுத்து உரமாகவும், சுத்திகரிக்கப்பட்ட நீராகவும் மாற்றி விவசாய நிலங்களுக்கும் இதர தேவைகளுக்கும் பயன்படுத்த முடியும். இந்த நீா் வாசனையோ, கலங்கலோ இல்லாமல் தெளிந்ததாக இருக்கும். இதனால், நோய்த் தொற்றோ, பாதிப்போ இருக்காது.
இத்திட்டம் தமிழகத்தில் முதன்முதலாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் செயல்படுத்தப்பட்ட நிலையில், 2ஆவதாக குழித்துறை நகராட்சியில் செயல்படுத்துவது இந்நகராட்சியின் பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது.
இத்திட்டத்தைக் கொண்டுவந்த தமிழக அரசுக்கும், அதிகாரிகளுக்கும் வாழ்த்துகள். இந்த சுத்திகரிப்பு நிலையத்தைப் பாா்க்க விரும்பும் பள்ளி, கல்லூரி மாணவா்-மாணவியா் நகராட்சி அலுவலகத்தைத் தொடா்பு கொண்டால் உரிய அனுமதி வழங்கப்பட்டு, அதுகுறித்து அதிகாரிகள் விளக்கிக் கூறுவா் என்றாா் அவா்.