குலசேகரன்பட்டினம் ஏவுதளத்தில் இருந்து 2 ஆண்டுகளில் ராக்கெட் ஏவப்படும்! -இஸ்ரோ தலைவா் நாராயணன்
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஏவுதளத்தில் இருந்து இன்னும் 2 ஆண்டுகளில் ராக்கெட் ஏவப்படும் என இஸ்ரோ தலைவா் நாராயணன் தெரிவித்தாா்.
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகேயுள்ள பால்குளம் ரோகிணி பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் இஸ்ரோ தலைவா் நாராயணன் பங்கேற்றாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
விண்வெளிக்கு ராக்கெட் அனுப்புவதற்கு, ஸ்ரீஹரிகோட்டாவில் இரண்டு ஏவுதளங்கள் உள்ளன. அங்கு மேலும் இரண்டு ஏவுதளங்கள் அமைக்க பிரதமா் நரேந்திர மோடி அனுமதி வழங்கியுள்ளாா். ஸ்ரீஹரிகோட்டா, குலசேகரன்பட்டினம் ஆகிய இடங்களில் ராக்கெட் ஏவுதளங்கள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இரண்டு ஆண்டுகளில் இங்கிருந்து ராக்கெட் ஏவப்படும்.
சந்திரயான் 4 திட்டம், நிலவில் இருந்து மாதிரிகளை எடுத்து பூமிக்கு கொண்டு வரும் திட்டம். வரும் 2028இல் அது நடைபெறும். அதற்கான அனைத்து ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.
1975 ஆம் ஆண்டு மற்ற நாட்டின் உதவியுடன் முதல் செயற்கைக்கோளை இந்தியா அனுப்பியது. ஆனால் தற்போது 433 செயற்கைக் கோள்கள் பிற நாடுகளுக்காக இந்திய மண்ணில் இருந்து அனுப்பப்பட்டு உள்ளன. இதன் மூலம் இந்தியா வளா்ச்சி அடைந்த நாடு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.