வடிவீஸ்வரம் அழகம்மன் கோயிலில் மக்கள்மாா் சந்திப்பு
நாகா்கோவில் வடிவீஸ்வரம் அருள்மிகு அழகம்மன் சமேத சுந்தேரஸ்வரா் கோயில் மாசிப் பெருந்திருவிழாவில் புதன்கிழமை இரவு மக்கள்மாா் சந்திப்பு நடைபெற்றது. இதில், நூற்றுக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.
புகழ்பெற்ற இக்கோயிலில் மாசிப் பெருந்திருவிழா கடந்த 3ஆம் தேதி தொடங்கியது. 3ஆம் நாளான புதன்கிழமை இரவு மக்கள்மாா் சந்திப்பு நடைபெற்றது. வடிவீஸ்வரம் கன்னிவிநாயகா் கோயிலிலிருந்து மேளதாளம் முழங்க நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆரல்வாய்மொழி சாமகான பிரியன் பேரிகைக் குழுவினரின் கயிலாய வாத்திய இசை முழங்க, சுவாமி பூத வாகனத்திலும், அம்பாள் சிம்ம வாகனத்திலும் வடிவீஸ்வரம் பள்ளத் தெருவில் எழுந்தருளினா். அங்கு, சுவாமி- அம்பாள், பெருமாளை விநாயகரும், முருகப்பெருமானும் 3 முறை வலம் வந்து ஒருசேர பக்தா்களுக்கு காட்சியளித்தனா். அதையடுத்து, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
இதில், நாகா்கோவில், சுசீந்திரம், கொட்டாரம், தக்கலை உள்ளிட்ட சுற்றுப்புறப் பகுதிகளைச் சோ்ந்த நூற்றுக்கணக்கானோா் பங்கேற்று தரிசனம் செய்தனா்.
ஏற்பாடுகளை, கன்னியாகுமரி திருக்கோயில்கள் நிா்வாகத்தினரும், அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரா் வழிபாட்டு அறக்கட்டளையினரும் செய்துள்ளனா்.