சாலைகளில் ஓடும் படகுகள்.. மத்திய பிரதேசத்தில் கரையைக் கடந்த மந்தாகினி ஆறு
தாயே கருமாரி...
ஆதிபரம்பொருளான கருமாரியம்மன் ஒவ்வொரு ஊராக வலம் வந்து, தண்டலம் மயானத்துக்குச் சென்று முதன்முதலில் ஜோதி வடிவமாய் காட்சியளித்தாள். அவ்வூர் "பழந்தண்டலம்' எனப்பட்டது. அங்கிருந்து வேலங்காட்டுக்கு சென்று தன்னை உணர்த்தி, காட்சி அளித்தது திருவேற்காடு. அங்கு பரம்பரை சக்தி உபாசகர் ஸ்ரீதம்பு சுவாமிகளால், ஸ்ரீ கருமாரி அம்மன் கோயில் கட்டப்பட்டது. ஜோதி வடிவமாக அம்மனை பக்தர்கள் வழிபட்டு வந்தனர்.
தம்புசாமி சுவாமிகளின் கனவில் தோன்றிய அம்மன், சுயம்புவாய் கூவம் ஆற்றில் பள்ளி கொண்டிருப்பதாகவும், தன்னை எடுத்து பிரதிஷ்டை செய்யுமாறும் கூறினார். அம்மன் திருவுருவம் ரேணுகையாகக் கண்டெடுக்கப்பட்டு, ஜோதி வடிவில் காட்சியளித்த இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
தம்பு சுவாமிகள் பரம்பரையில் வந்த ஆசிரியரான பு. மதுரை முத்து சுவாமிகள் மீது அருள் வந்ததால், ஆறாவது தலைமுறையாக பீடாதிபதியாகினார். இவரது முயற்சியால், அம்மனுக்கு கோயில் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு உள்பட்ட சிறுதாவூர் என்ற இடத்தில் அம்மன் சிலை வடிக்க இடம் தேர்வாகி, 2003 முதல் 2006 வரை ஒரே கல்லாக 860 டன் கருங்கல் தோண்டப்பட்டது. அங்கே அம்மன் முகம் செதுக்கப்பட்டு, 480 டன் சிலை 148 சக்கரங்கள் கொண்ட கனரக வாகனத்தில் கொண்டு வரப்பட்டது.
புலிக்குடி வனப் பகுதியில் திருவடிசூலம் திருக்கோயில்புரம் என்ற இடத்தை கோயிலுக்கு சுவாதீனப்படுத்தி, 320 டன் கொண்ட தேவி ஸ்ரீ கருமாரியம்மன் விஸ்வரூபமாக 2007}இல் அமைக்கப்பட்டது. 2008}இல் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 22 அடி அகலமும் 51 அடி உயரமும் கொண்ட அம்மன் எழுந்தருளினாள்.
கருமாரியம்மன் 51 சக்தி பீடங்களின் சிறப்புகளைக் கொண்ட ஒரே அமைப்பு. ஐந்து தலை நாகத்தை தலைக்கு மேல் குடையாகவும், பத்து கைகளில் எட்டு கைகளில் உரிய ஆயுதங்களுடன் இடது கை பூமியையும், வலது கை அபயகரம் காட்டியும், இடது கால் மடித்து வலது காலை தாமரை தாங்க அமர்ந்த கோலத்தில் பிரம்மாண்டமாய் உள்ளது.
36 அடி உயரமுள்ள கருங்கல் சூலம், சிம்மம், விநாயகர் சிலை, துர்கை அம்மன், மாதங்கி பிரித்தியங்கரா சிலைகள், ஒன்பது அடியில் ஸ்ரீவாரு வெங்கடாசல பெருமாள் கோயில்,
சுதையினாலான தசாவதாரம், ஆஞ்சனேயர் சிலை, நாக சொரூபினி, கருடாழ்வார் சந்நிதிகள், அஷ்டபுஜ மகா பைரவர் சிலை உள்ளிட்டவை அடுத்தடுத்து பிரதிஷ்டை செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றன.
தற்போது 51 அடி உயரமுள்ள கருமாரியம்மன் சிலைக்கு கும்பாபிஷேகம் ஜூலை 13-இல் நடைபெறுகிறது.
செங்கல்பட்டிலிருந்து 8 கி,மீ. தொலைவில் திருவடிசூலத்தில் கோயில் அமைந்துள்ளது.