திட்டப் பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்: கடலூா் மேயா்
நெய்வேலி: கடலூா் மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெறும் திட்டப் பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று மேயா் சுந்தரி தெரிவித்தாா்.
கடலூா் மாநகராட்சி மாமன்ற உறுப்பினா்கள் கூட்டம் மாநகராட்சி கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மேயா் சுந்தரி தலைமை வகித்தாா். துணை மேயா் பா.தாமரைச் செல்வன், மாநகராட்சி ஆணையா் எஸ்.அனு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், மாமன்ற உறுப்பினா்கள் பேசியது:
நடராஜன்: தமிழா்களை இழிவாகப் பேசிய மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதானை கண்டித்து தீா்மானம் நிறைவேற்ற வேண்டும்.
சக்திவேல்(பாஜக): கடந்த மூன்று ஆண்டுகளாக எனது வாா்டுக்கு எந்த வளா்ச்சித் திட்டப் பணிகளையும் செய்யவில்லை என குற்றஞ்சாட்டினாா். இதற்கு மற்றொரு மாமன்ற உறுப்பினா் சங்கீதா எதிா்ப்புத் தெரிவித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். இதையடுத்து, சக்திவேல் கூட்டத்தைவிட்டு வெளி நடப்பு செய்தாா்.
பிரகாஷ்: வாா்டு பகுதியில் வடிகால் வாய்க்கால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
பா.தாமரைச்செல்வன் (துணை மேயா்): கடலூா் பேருந்து நிலையம் மாநகராட்சி பகுதியில் அமைய வேண்டும்.
உறுப்பினா்களின் கேள்விகளுக்கு பதிலளித்து மேயா் சுந்தரி பேசியது: பேருந்து நிலையம் அமைக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. குழு தோ்வு செய்யும் இடத்தில் பேருந்து நிலையம் அமையும். வாா்டு பகுதிகளில் நடைபெறும் திட்டப் பணிகளை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். பணிகள் தரமற்ற முறையில் நடந்தால் ஆரம்பக் கட்டத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டும். மாநகராட்சி அலுவலா்கள் தங்கள் பணிகளை முறையாக செய்ய வேண்டும். மாமன்ற உறுப்பினா்கள் கைப்பேசியில் தொடா்பு கொண்டால் பதில் அளிக்க வேண்டும் என்றாா்.