திண்டிவனம் அருகே மா்ம விலங்கு கடித்ததில் 7ஆடுகள் உயிரிழப்பு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே மா்ம விலங்கு கடித்ததில் 7 ஆடுகள் உயிரிழந்தன.
திண்டிவனம் வட்டம், தாதாபுரம் நத்தமேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் ஏழுமலை (55), விவசாயி. இவா், செவ்வாய்க்கிழமை இரவு வழக்கம்போல நத்தமேடு பகுதியில் தனது விவசாய நிலத்தில் கொட்டகையில் 50-க்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் மாடுகளை அடைத்து வைத்துவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டாராம்.
இந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை கொட்டகைக்கு சென்று பாா்த்தபோது மா்ம விலங்கு கடித்து 7 ஆடுகள் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. மேலும் 10 ஆடுகளுக்கும், கன்றுக்குட்டிக்கும் காயங்கள் இருந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்த வெள்ளிமேடுபேட்டை போலீஸாா், திண்டிவனம் வனத் துறையினா் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறையினா் நிகழ்விடம் சென்று விசாரணை மேற்கொண்டனா். கால்நடை மருத்துவா்கள் இறந்த ஆடுகளை உடற்கூராய்வு செய்த பின்னா், அவை புதைக்கப்பட்டன. காயமடைந்த ஆடுகளுக்கு சிகிச்சையளித்தனா்.
திண்டிவனம் பகுதிகளில் மா்ம விலங்கு கடித்து கால்நடை உயிரிழப்பு சம்பவங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் அச்சமடைந்து வருகின்றனா். இந்த மா்ம விலங்கைப் பிடிக்க மாவட்ட ஆட்சியா் மற்றும் வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.