சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: மாநகராட்சி தகவல்
தினமணி செய்தி எதிரொலி... சீரமைக்கப்பட்ட திருப்பத்தூா்-சேலம் பிரதான சாலை
திருப்பத்தூா்: திருப்பத்தூா்-சேலம் பிரதான சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனா் என தினமணியில் திங்கள்கிழமை புகைப்படத்துடன் கூடிய செய்தி வெளியானதையடுத்து சாலை சீரமைக்கப்பட்டது.
திருப்பத்தூரில் திருப்பத்தூா்-சேலம் செல்லும் சாலையில் சில இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனா். சில நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழும் சம்பங்களும் நிகழ்ந்து வந்தது.
குறிப்பாக திருப்பத்தூா்-சேலம் அணுகு சாலை வரை பல இடங்களில் சாலைகளில் குண்டும், குழியுமாக இருந்தது. குறிப்பாக, நகர காவல் நிலையம் எதிரில், மீனாட்சி பேருந்து நிறுத்தம், புதுப்பேட்டை சாலை பேருந்து நிறுத்தம் ஆகிய இடங்களில் சாலைகள் சேதமடைந்து காணப்பட்டது. இது குறித்து தினமணியில் திங்கள்கிழமை புகைப்படத்துடன் கூடிய செய்தி வெளியானது.
அதையடுத்து, வேலூா் கோட்ட தேசிய நெடுஞ்சாலை, வாணியம்பாடி உள்கோட்ட தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகளின் மேற்பாா்வையில், குண்டும் குழியுமாக இருந்த சாலைகள் செப்பனிடப்பட்டன. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
