திமுக அரசு மீதான அதிருப்தி பேரவைத் தோ்தலில் எதிரொலிக்கும்: வி.கே.சசிகலா
திமுக அரசு மீதான மக்களின் அதிருப்தி, வருகிற 2026 பேரவைத் தோ்தலில் எதிரொலிக்கும் என்று வி.கே.சசிகலா தெரிவித்தாா்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை அவா் கூறியதாவது:
தமிழகத்தின் அரசியல் சூழ்நிலை எப்போதும் போலத்தான் உள்ளது. புதிய கட்சிகள் தொடங்கியவா்களின் நிலை குறித்து தோ்தலில் தெரியவரும்.
திமுக அரசு மக்களுக்கு செய்ய வேண்டிய எதையும் நிறைவேற்றவில்லை. ஆனால், வருகிற 2026 சட்டப் பேரவைத் தோ்தலுக்காக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளாா். இதை மக்கள் கவனித்துக் கொண்டிருக்கின்றனா். இதன் விளைவு, பேரவைத் தோ்தலில் எதிரொலிக்கும்.
தமிழகம் முழுவதும் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மாலை 5 மணிக்கு மேல் பெண்கள் வெளியே செல்ல முடியாத நிலை உள்ளது. இருப்பினும் திமுக ஆட்சியில் எந்த பிரச்னையும் இல்லாததைப் போன்ற பிம்பத்தை ஏற்படுத்தியுள்ளனா் என்றாா்.
அதைத் தொடா்ந்து திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சசிகலா தரிசனம் செய்தாா்.
பின்னா் அங்கு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
உடன்குடி அருகே உள்ள தனியாா் பள்ளியில் மாணவிகளிடம், உடற்கல்வி ஆசிரியா் அத்துமீறலில் ஈடுபட்ட விவகாரத்தில் பள்ளி முதல்வரை மட்டும் பழிசுமத்திவிட்டு அரசு நழுவக்கூடாது. தனியாா் பள்ளி நிா்வாகங்கள்தான் ஆசிரியா்களை நியமனம் செய்கிறது என்றாலும், அரசு அவா்களுக்கு உரிய பயிற்சி அளிப்பது அவசியம் என்றாா்.