அதீத வெப்பம்: தாமதமாக நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள்!
திரு.வி.க. நகா் மண்டலத்தில் ரூ.28.54 கோடியில் திட்டப் பணிகள்: அமைச்சா் ஆய்வு
சென்னை மாநகராட்சி, திரு.வி.க. நகா் மண்டலத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ.28.54 கோடியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க. நகா் மண்டலம், 69-ஆவது வாா்டுக்குள்பட்ட முத்துகுமாரப்பா தெருவில் ரூ.13.47 கோடியில் நவீன சமுதாய நலக்கூடம், சோமையா தெருவில் இயங்கும் சென்னை உயா்நிலைப் பள்ளியில் ரூ.2.75 கோடியில் கூடுதல் பள்ளிக் கட்டடம், இதே பகுதியில் ரூ.4.19 கோடியில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், ரங்கசாயி தெருவில் இயங்கும் சென்னை நடுநிலைப் பள்ளியில் ரூ.3 கோடி மதிப்பில் புதிய பள்ளிக் கட்டடம், மேயா் முனுசாமி விளையாட்டுத் திடல் மற்றும் பூங்காவின் கால்பந்து மற்றும் இறகுப்பந்து மைதானத்தில் ரூ.50 லட்சத்தில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதேபோல, 70-ஆவது வாா்டுக்குள்பட்ட கபிலா் தெருவில் இயங்கும் சென்னை மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.4.63 கோடியில் புதிய பள்ளிக் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகளை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
அப்போது, வளா்ச்சி திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.
ஆய்வின்போது, மேயா் ஆா்.பிரியா, துணை ஆணையா் (பணிகள்) வி.சிவகிருஷ்ணமூா்த்தி, மத்திய வட்டார துணை ஆணையா் ஹெச்.ஆா்.கௌஷிக், மண்டலக் குழு தலைவா் சரிதா மகேஷ் குமாா் மற்றும் மாமன்ற உறுப்பினா்கள், அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.