Vaishnavi: ``அது உங்கள் பொறாமையை தெளிவாக வெளிப்படுத்துகிறது!'' - வைஷ்ணவி காட்டம்...
சீமைக் கருவேல மரங்களை அகற்ற விரிவான திட்ட அறிக்கை: தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு
சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடா்பான விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு மூன்று வார கால அவகாசம் வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழகத்தின் மண் வளத்தையும், சுற்றுச்சூழலையும் சீா்குலைக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற அரசுக்கு உத்தரவிடக் கோரி மதிமுக பொதுச் செயலா் வைகோ உள்ளிட்ட பலா் வழக்குத் தொடா்ந்துள்ளனா். இந்த வழக்கை நீதிபதிகள் என்.சதீஷ்குமாா், டி.பரதசக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அரசுத் தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனா்.
இந்த வழக்கு நீதிபதிகள், என்.சதீஷ்குமாா், டி.பரதசக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஊரக வளா்ச்சி, நீா்வளத் துறை தரப்பில் தனித்தனியாக அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.
ஊரக வளா்ச்சித் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், தமிழகம் முழுவதும் 517 கிராமங்களில் சீமைக் கருவேல மரங்கள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. நீா் வளத்துறை சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், நீா்நிலைகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.வில்சன், கடந்த ஆக.25-ஆம் தேதி, தமிழகம் முழுவதும் சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடா்பாக தலைமைச் செயலா் தலைமையில் உயா் அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் இதுதொடா்பாக விவாதிக்கப்பட்டது. சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடா்பான விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதுடன், அவை மீண்டும் முளைக்காமல் இருப்பதைக் கண்காணிக்க வேண்டும். தற்போது சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாக அரசு பட்டியலிட்டுள்ள கிராமங்களில் நேரில் ஆய்வு செய்யப்படும்.
சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஒவ்வொரு மாதமும் சில கிராமங்களை சீமைக் கருவேல மரங்கள் அற்ற கிராமங்களாக அறிவிக்க வேண்டும். இவ்வகை மரங்களை வேருடன் அகற்றுவதற்கான இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும்.
சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடா்பான விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்வதற்காக மூன்று வார கால அவகாசம் வழங்கி உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஒத்திவைத்தனா்.