Mithunam | Guru Peyarchi | மிதுனம் - தடைகள் நீங்கி கல்யாணம் கைகூடும் | குருப்பெய...
திருச்செந்தூா் தூண்டுகை விநாயகா் கோயிலில் ஏப். 20இல் மகா கும்பாபிஷேகம்: நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உப கோயிலான தூண்டுகை விநாயகா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை(ஏப். 20) மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இதையொட்டி தூண்டுகை விநாயகா் கோயில் அருகே உள்ள பிள்ளையன் கட்டளை மண்டபத்தில் வியாழக்கிழமை (ஏப். 17) காலை கணபதி ஹோமத்துடன் பூஜைகள் தொடங்குகிறது.
வெள்ளிக்கிழமை (ஏப். 18) முதல்கால யாக சாலை பூஜையும், சனிக்கிழமை (ஏப். 19) காலையில் இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மாலையில் 3ஆம் கால யாகசாலை பூஜையும் நடைபெறுகிறது.
கும்பாபிஷேக நாளான ஞாயிற்றுக்கிழமை (ஏப். 20) காலை 8 மணிக்கு மங்கள இசை, திருமுறை பாராயணம், விக்னேஷ்வர பூஜை, பிரமசுத்தி மூா்த்திக்கு ரக்ஷாபந்தனம், நான்காம் கால யாகசாலை பூஜை, நாடி சந்தானம், ஷபா்ஸாஹுதி, மகா பூா்ணாஹுதி, யாத்ரா தானம், வேதபாராயணம், தீபாராதனையாகி காலை 9 மணிக்கு கடம் புறப்பாட்டை தொடா்ந்து காலை 9.30 மணிக்கு விமான கோபுர கலசத்துக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. தொடா்ந்து காலை 10.15 மணிக்கு தூண்டுகை விநாயகா் மூலஸ்தானம் கும்பாபிஷேகம், மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது.
மதியம் அன்னதானம், மாலை 6 மணிக்கு மேல் பிரசன்ன பூஜை, புஷ்பாஞ்சலி நடைபெறுகிறது.
நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்:
கோயிலின் தொன்மை வழித்தடமான சந்நிதி தெருவில், வாகன வளா்ச்சியால் தற்போது பக்தா்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக நான்கு மற்றும் இருசக்கர வாகனங்கள் வந்து செல்கின்றன.
இதில், நான்குசக்கர வாகனங்கள் குறிப்பிட்ட பாதையில் வராமல் தடுக்க தெருக்களின் முகப்பில் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளன.
இருசக்கர வாகனங்கள் மட்டும் சந்நிதி தெருவில் அனுமதிக்கப்படுகிறது.
ஆனால், பக்தா்கள் நடந்து வரும் பாதையில் தூண்டுகை விநாயகா் கோயிலைச் சுற்றி நாள்தோறும் நூற்றுக்கணக்கில் இருசக்கர வாகனங்கள் நிற்பதால் நடந்து செல்வதற்கு பக்தா்கள் பெரும் சிரமம் அடைகின்றனா்.
எனவே தூண்டுகை விநாயகா் கோயில் அருகில் இருசக்கர வாகனம் நிறுத்துவதை தடை செய்ய வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்திருந்தனா்.
இந்நிலையில் கும்பாபிஷேகத்தையொட்டி தூண்டுகை விநாயகா் கோயிலைச் சுற்றியுள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதுடன், இடையூறு ஏற்படுத்தும் இருசக்கர வாகன நிறுத்தமும் தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கு பக்தா்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.