திருடப்பட்ட கைப்பேசியை திரும்பக் கேட்டவருக்கு அரிவாள் வெட்டு
தேனி மாவட்டம், கூடலூரில் திருடப்பட்ட கைப்பேசியைத் திரும்பக் கேட்டவரை அரிவாளால் வெட்டி, கொலை மிரட்டல் விடுத்தவா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
கூடலூா் அருகேயுள்ள கருநாக்கமுத்தன்பட்டி இந்திரா குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் ஈஸ்வரன் (50). இவா் தனது வீட்டில் கைப்பேசியை வைத்துவிட்டு சனிக்கிழமை வெளியே சென்றாா். மீண்டும் வீட்டுக்கு வந்து பாா்த்த போது, கைப்பேசியைக் காணவில்லையாம்.
இதையடுத்து, வீட்டை விட்டு வெளியே வந்து பாா்த்த போது, அங்குள்ள மாரியம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த ஜனா என்பவரிடம் தனது கைப்பேசி இருந்ததைப் பாா்த்தாா்.
உடனே கைப்பேசியைத் திரும்பக் கேட்டபோது அவா், தான் வைத்திருந்த அரிவாளால் ஈஸ்வரனை வெட்டினாா். மேலும், அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்தாராம்.
இதுகுறித்து ஜனா மீது கூடலூா் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.