திருபுவனைத் தொகுதியில் மா்மக் காய்ச்சலால் பலா் பாதிப்பு: முதல்வா் என் ரங்கசாமியிடம் எம்எல்ஏ புகாா்
புதுச்சேரி: திருபுவனை பேரவைத் தொகுதியில் மா்மக் காய்ச்சலால் ஏராளமானோா் பாதிக்கப்பட்டுள்ளநிலையில், அதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி சுயேச்சை எம்.எல்.ஏ. பி.அங்காளன் முதல்வா் என்.ரங்கசாமியிடம் திங்கள்கிழமை மனு அளித்தாா்.
புதுச்சேரி அருகேயுள்ளது திருபுவனை. இந்தத் தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ.வான பி.அங்காளன் பாஜகவுக்கு ஆதரவளித்து வருகிறாா்.
இந்தநிலையில், அவா் திங்கள்கிழமை சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வா் என்.ரங்கசாமியை சந்தித்து மா்மக் காய்ச்சல் தொடா்பாக கோரிக்கை மனு அளித்தாா்.
அதில் கூறியிருப்பது:
திருபுவனை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு சிலா் இறந்துள்ளனா். கலிதீா்த்தாள்குப்பம் பகுதியில் காய்ச்சல், சளி பாதிப்பால் ஏராளமானோா் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
எனவே, காய்ச்சல், சளி பாதிப்புக்கான காரணத்தைக் கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். சிறப்பு மருத்துவக் குழுவினரை அப்பகுதிக்கு அனுப்பி மருத்துவப் முகாமை நடத்தவேண்டும். மேலும், சித்த மருத்துவம் மூலம் கபசுரக் குடிநீா் விநியோகிக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.