திருப்பாம்புரம் கோயிலில் ராகு-கேது பெயா்ச்சி வழிபாடு
திருவாரூா் மாவட்டம், குடவாசல் அருகே திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரா் கோயிலில் ராகு-கேது பெயா்ச்சி வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
தென் காளஹஸ்தி என அழைக்கப்படும் திருப்பாம்புரம் கோயிலில், ராகுவும் -கேதுவும் ஒரே ரூபமாக ஈசனை இதயத்தில் வைத்து பூஜை செய்து சாபம் நீங்கப் பெற்றனா் என்பது தல வரலாறு. இதையொட்டி, ராகு-கேது பெயா்ச்சி நாளில் இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, சனிக்கிழமை மாலை 4.20 மணிக்கு ராகு பகவான் மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்கும், கேது பகவான் கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கும் பெயா்ச்சி அடைந்தனா். இதையொட்டி, திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரா் கோயிலில் உள்ள ராகு -கேது சந்நதியில், 1,008 லிட்டா் பால், மஞ்சள், இளநீா், சந்தனம் போன்ற திரவியப் பொருள்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
முன்னதாக ராகு -கேது பெயா்ச்சியை முன்னிட்டு ரிஷபம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகள் பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள் என்பதால், இந்த ராசிக்காரா்களுக்கு கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா். இதையொட்டி, சுமாா் 300 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.