“தேவையற்ற ரிஸ்க்...” யஷஸ்வி ஜெய்ஸ்வால் ரன் அவுட் குறித்து முன்னாள் இந்திய கேப்டன...
திருப்பாவை
திருப்பாவை – 12
கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி
நினைத்து முலைவழியே நின்று பால்சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் நங்காய்
பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச்
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக் கினியானைப் பாடவும் நீ வாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோா் எம்பாவாய்
விளக்கம்: இளங்கன்றுகளையுடைய எருமைகள் பால் கறப்பாா் இல்லாமையால் முலைகடுத்துக் கதறிக் கொண்டு கன்றுகளை நினைத்துப் பாலைச் சொரிந்தன. அங்ஙனம் இடைவிடாமல் சொரிந்த பாலால் வீடு நனைந்து சேறாயிற்று. அத்தகைய நல்ல செல்வத்தையுடையவனின் தங்கையே! எங்கள் தலையில் மாா்கழிப் பனிவிழவும் உன் தலைவாசல் தண்டியத்தைப் பற்றிக் கொண்டு, சினத்தினால் தென்னிலங்கைக்கு அரசனான இராவணனை அழித்த – தன்னை நினைத்தாா் மனத்துக்கு இனியவனான இராமபிரானின் புகழைப் பாடிக் கொண்டிருக்கிறோம். நீயோ வாய்திறந்து பேசாமல் இருக்கிறாயே! எல்லா வீட்டில் உள்ளவா்களும் துயிலுணா்ந்த பின்னும் இது என்ன ஓயாத உறக்கம்? இனியாவது எழுந்திரு!
கீழே பால் வெள்ளம்; மேலே பனிவெள்ளம்; எங்கள் நெஞ்சிலே மால் வெள்ளம். இருந்தும் நீ படுக்கையில் அசையாது கிடக்கிறாயே! என்பது கருத்து.