வேலைவாய்ப்பு உருவாக்குவதில் கவனம் செலுத்தும் பாஜக அரசு: பிரதமர்!
திருப்பூர்: "ஏன் இந்த ஆஸ்பத்திரில சேர்த்தீங்க?" - கொலையில் முடிந்த நாய்க்கடி பிரச்னை; என்ன நடந்தது?
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வடக்கவுஞ்சி பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி (31). இவர், திருப்பூர் சாந்தி தியேட்டர் அருகே உள்ள குமாரனந்தபுரம் பகுதியில் தங்கியிருந்து ஓட்டுநராக வேலை செய்து வருகிறார்.
கருப்பசாமியின் தங்கை பிரியாவும் அதே பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில், பிரியாவின் மகள் பவதாரணி நேற்று இரவு வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, தெரு நாய் ஒன்று சிறுமி பவதாரணியைக் கடித்துள்ளது.
இதில், காயமடைந்த அவரை திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்குச் சிகிச்சை பெற்று வரும் பவதாரணியைப் பார்ப்பதற்காக கருப்பசாமி வந்துள்ளார்.
அப்போது தங்கையின் கணவர் கார்த்திகேயனிடம், 'எதற்காக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தீர்கள். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை சேர்க்க வேண்டியது தானே' எனக் கேட்டுத் தகாத வார்த்தையால் திட்டியதாகத் தெரிகிறது.

அப்போது கார்த்திகேயனின் அக்கா கணவர் குலசிவேலு (51) என்பவரும் குழந்தையைப் பார்க்க வந்துள்ளார். அவர் கருப்பசாமியிடம் நாய் கடித்தால் அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சை கொடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இதில், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீரென கருப்பசாமி, குலசிவேலுவைத் தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர், தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து கருப்பசாமி கழுத்தில் குத்தியுள்ளார்.
இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கிய அவரை அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவிலிருந்த கருப்புசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாகப் பலியானார்.
இதுகுறித்து திருப்பூர் தெற்கு போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து குலசிவேலுவைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.