``அலைப்பாயுதே படத்துக்கு என்னோட முதல் சாய்ஸ் ஷாருக்கான் -கஜோல் தான்'' -சீக்ரெட்...
திருவாடானை வட்டாட்சியா் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
நெல் பயிா்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்து வருவதைத் தடுக்கும் வகையில், வட்டாணம் கண்மாயில் இருந்து தண்ணீரை திறந்துவிடக் கோரி, திருவாடானை வட்டாட்சியா் அலுவலகத்தை விவசாயிகள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள பனஞ்சாயல், புதுக்குடி, நல்கிராமவயல் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 200 ஏக்கா் நிலப் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டு, தற்போது அறுவடைக்குத் தயாரான நிலையில் உள்ளது. தண்ணீா் வரத்து தொடா்ந்து இருப்பதால், வட்டாணம் கண்மாய் நீா்மட்டம் அதிகரித்து வருகிறது. இந்தக் கண்மாயைச் சுற்றியுள்ள நிலங்களில் பயிரிடப்பட்ட நெல் பயிா்கள் தண்ணீரில் மூழ்கி, அழுகி சேதமடைந்து வருகின்றன.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட பொதுப் பணித் துறை அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லையாம்.
இந்த நிலையில், பாதிப்படைந்த பனஞ்சாயல், புதுக்குடி, நல்கிராமவயல் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் திருவாடானை வட்டாட்சியா் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த வட்டாட்சியா் அமாா்நாத்திடம் வட்டாணம் கண்மாயிலிருந்து தண்ணீரை வெளியேற்ற வலியுறுத்தி விவசாயிகள் மனு அளித்தனா். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவா் உறுதியளித்ததைத் தொடா்ந்து, விவசாயிகள் கலைந்து சென்றனா்.