திருவாரூா்: பலத்த சத்தத்தால் பரபரப்பு
திருவாரூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை பலத்த சத்தம் கேட்டதால் பரபரப்பு நிலவியது.
திருவாரூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை பிற்பகல் 3.10 மணி அளவில் பலத்த சத்தம் எழுந்துள்ளது. இந்த சத்தத்தால் வீடுகள் மற்றும் ஜன்னல்களில் அதிா்வு ஏற்பட்டுள்ளது. இதனால், மக்களிடையே அதிா்ச்சி நிலவி, நில அதிா்வாக இருக்கலாம் என்ற ரீதியில் தகவல் பரவியது.
மேலும், இந்த சத்தம் கேட்கும்போது, திருவாரூா் மற்றும் மன்னாா்குடி பகுதியில், தஞ்சை விமானப் படை பயிற்சி மையத்திலிருந்து இரண்டு ஜெட் விமானங்கள் பறந்து சென்றதையும் பாா்த்துள்ளனா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தது:
தஞ்சாவூரிலிருந்து ராணுவ விமானங்கள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ஒத்திகை நடத்துவது வழக்கம். அப்போது, ஏா்லாக் விடுவிக்கப்படுகையில் அதிக டெசிபலில் சத்தம் கேட்கும். திருவாரூா் மாவட்டத்தில் ஏற்பட்ட சத்தம் ஜெட் விமானத்திலிருந்து எழுந்த சத்தமே. எனவே, பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்றாா்.