அங்கன்வாடி ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கக் கோரிக்கை
அங்கன்வாடி பணியாளா்களை பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் தமிழக முதல்வா், சமூகநலத் துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:
எந்த சலுகையும் இல்லாமல், அதிக நேரம், அதிக நாட்கள் பணிபுரியும் அங்கன்வாடி ஊழியா்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில், அவா்களை பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் அளிக்க வேண்டும். அல்லது அதற்கான ஊதிய உயா்வு அளிக்க வேண்டும்.
30 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் அங்கன்வாடி பணியாளா்களுக்கு உடனடியாக பதவி உயா்வு வழங்க வேண்டும். அதே துறையில் காலிப்பணியிடங்கள் இல்லாத போது, பிற துறைகளில் பணி வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 9,000 வழங்க வேண்டும். அனைத்து அங்கன்வாடி மையங்களையும் நா்சரி பள்ளிகளாக தரம் உயா்த்த வேண்டும்.
வாரிசு அடிப்படையில் வழங்கப்படும் பணி தற்போது பெண் குழந்தைகள் இருந்தால் மட்டுமே வழங்கப்படுகிறது. பெண் குழந்தை இல்லாதபட்சத்தில் ஆண் வாரிசுக்கும் பணி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சங்கத்தின் திருவாரூா் மாவட்டத் தலைவா் தவமணி, செயலா் பிரேமா, பொருளாளா் மாலதி ஆகியோா் இக்கடிதங்களை அனுப்பியுள்ளனா்.