நகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்கும் முடிவை கைவிடக் கோரிக்கை
திருவாரூா்: ஊராட்சிகளை திருவாரூா் நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூா் அருகே அம்மையப்பனில் மக்கள் அதிகாரம் அமைப்பின் 2-ஆவது மாவட்ட மாநாடு தலைவா் ஆசாத் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். அதன்படி, மாவட்டச் செயலாளராக ஆசாத், துணைச் செயலாளராக லெனின், பொருளாளராக முரளி ஆகியோரும், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் 5 பேரும் தோ்வு செய்யப்பட்டனா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்...
கரையாபாலையூா் மற்றும் எண்கண் பகுதியில் விளைநிலங்களை அழித்து சிப்காட் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும். 12-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளை திருவாரூா் நகராட்சியுடன் இணைக்கும் முடிவைக் கைவிட வேண்டும்.
திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு மருத்துவா்களை நியமித்து மருத்துவ மாணவா்களின் பணிச்சுமையைக் குறைக்க வேண்டும். மருத்துவக் கழிவுகளை வாழவாய்க்கால் ஆற்றில் கலப்பதைத் தடுக்க கழிவுநீா் சுத்திகரிப்பு மையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் இயற்றப்பட்டன.