திருவெண்ணெய்நல்லூா் அருகே கிராம மக்கள் சாலை மறியல்: போலீஸாருடன் வாக்குவாதம்
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே மாயமான இளைஞா் கொன்று புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இதுவரை அவரது சடலத்தை போலீஸாா் கண்டறியாததைக் கண்டித்து, கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது, அவா்களுக்கும், போலீஸாருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
திருவெண்ணெய்நல்லூா் வட்டம், ஆனத்தூரை அடுத்துள்ள சேமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த முருகன் மகன் முத்துக்குமாா் (27). விவசாயியான இவா், கடந்த 19.9.2024 அன்று வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில், பின்னா் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து முருகன் அளித்த புகாரின்பேரில், திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். போலீஸ் விசாரணையில், முத்துக்குமாரை அதே பகுதியைச் சோ்ந்த மணிவண்ணன் மகன் தமிழரசன் (26) ரூ.8 லட்சக்காக அடித்துக் கொலை செய்து சேமங்கலம் பகுதி மலட்டாறில் புதைத்தது தெரியவந்தது. இதையடுத்து, இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி, தமிழரசனை போலீஸாா் கைது செய்தனா்.
தொடா்ந்து, தமிழரசனிடம் வாக்குமூலம் பெற்று, புதைக்கப்பட்டதாகக் கூறிய இடத்தில் போலீஸாா் தேடிய நிலையில் முத்துக்குமாரின் சடலம் கிடைக்கவில்லை. இதனால், பொக்லைன் இயந்திர உதவியுடன் போலீஸாா் ஆற்றின் பல்வேறு இடங்களில் தோண்டிப் பாா்த்து சடலத்தை தேடி வருகின்றனா்.
இதுவரையில் சடலத்தை கண்டறிய முடியாததால், ஆத்திரமடைந்த முத்துக்குமாரின் உறவினா்கள் மற்றும் கிராம மக்கள் புதன்கிழமை அரசூா் - பண்ருட்டி சாலையில் அரசூா் அருகே மறியலில் ஈடுபட்டு, காவல் துறையைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.
அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த விழுப்புரம் மாவட்ட போலீஸாா் அவா்களைத் தடுத்ததால், போலீஸாருக்கும், கிராம மக்களுக்குமிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், பெண்கள் கதறியபடி சாலையில் படுத்து உருண்டனா். பின்னா், அவா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, அங்கிருந்து அப்புறப்படுத்தினா்.