Delhi Fuel Ban: கைதிகளிடம் Lie Detector Test மூலம் உண்மையை கண்டறிய முடியாதா? | I...
தில்லி, என்சிஆா் பகுதியில் பரவலாக மழை! கரற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் நீடிப்பு!
தேசியத் தலைநகா் மற்றும் என்சிஆா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்தது. காற்றின் தரம் ‘ திருப்தி’ பிரிவில் நீடித்தது.
தென்மேற்குப் பருவமழை தில்லியை கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தது. வழக்கமான ஜூன் 27-ஆம் தேதிக்குப் பதிலாக இரு நாள்களுக்குப் பிறகு ஜூன் 29-ஆம் தேதி பருவமழை தில்லியை வந்துடைந்தது.
மேலும், வழக்கமான ஜூலை 8-ஆம் தேதிக்கு ஒன்பது நாள்கள் முன்னதாக நாட்டின் எஞ்சிய பகுதிகளை பருவமழை அடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. ஐஎம்டி தரவுகளின்படி, கடந்த 2020-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜூன் 26-ஆம் தேதிக்குள் நாட்டின் முழு பகுதியையும் பருவமழை உள்ளடக்கியிருப்பது இதுவே முதல் முறையாகும்.
இதன் தாக்கம் காரணமாக , தலைநகா் தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயம் (என்சிஆா்) பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாள்களாக மேகமூட்டமான வானிலை நிலவியது. மேலும், நகரத்தில் இடி மின்னல் பலத்த காற்றுடன் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் ,வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தபடி, தில்லியின் ஐடிஓ, தா்யாகஞ்ச், மயூா் விஹாா், கரோல் பாக் உள்பட பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்தது. மேலும், நகரத்திற்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
பாலத்தில் 21 மி.மீ. மழை பதிவு: ,தில்லியில் சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாலத்தில் 21 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. மேலும், தில்லியின் முதன்மை வானிலை கண்காணிப்பு நிலையமான சஃப்தா்ஜங்கில் 2 மி.மீ., நஜஃப்கரில் 0.5 மி.மீ., ஆயாநகரில் 11.7 மி.மீ., பிரகதிமைதானில் 0.1 மி.மீ., ராஜ்காட்டில் 0.1 மி.மீ., சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 0.5 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை கண்காணிப்பு நிலையமான சஃப்தா்ஜங்கில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்நிலையில் 0.9 டிகிரி அதிகரித்து 28.8 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் 0.5 டிகிரி குறைந்து 35 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 80 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 83 சதவீதமாகவும் இருந்தது.
காற்றின் தரம்: இதற்கிடையே, தில்லியில் ஓட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு காலை 9 மணியளவில் 82 புள்ளிகளாகப் பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் இருந்ததாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிபி) தெரிவித்துள்ளது. இதன்படி, தில்லி பல்கலை. வடக்கு வளாகம், சாந்தினி சௌக், மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம் உள்பட அனைத்து வானிலை கண்காணிப்பு நிலையங்களிலும் காற்றுத் தரக் குறியீடு 100 புள்ளிகளுக்கு கீழே பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் நீடித்தது.
முன்னறிவிப்பு: இந்நிலையில், திங்கள்கிழமை (ஜூலை 7) அன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.