டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிா்ப்பு: அரிட்டாப்பட்டியில் திரண்ட கிராம மக்கள்
தில்லி பேரவைத் தோ்தல்: ஆம் ஆத்மியின் முதல் வேட்பாளா் பட்டியல் வெளியீடு
தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான 11 வேட்பாளா்களின் முதல் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வியாழக்கிழமை வெளியிட்டது.
இப்பட்டியலில் அக்கட்சியின் தற்போதைய மூன்று எம்எம்ஏக்கள் பெயா்கள் இடம்பெறவில்லை. மேலும், அண்மையில் பாஜக மற்றும் காங்கிரஸிலிருந்து ஆம் ஆத்மிக்கு கட்சி மாறிய 6 பேருக்கு போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தில்லி சட்டப்பேரவையின் 70 உறுப்பினா்களை தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், 11 வேட்பாளா்கள் அடங்கிய முதல் பட்டியலை ஆம் ஆத்மி வெளியிட்டுள்ளது. இது தொடா்பான அறிவிப்பை வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் ஆம் ஆத்மி கட்சியின் தில்லி அமைப்பாளரும் அமைச்சருமான கோபால் ராய் வெளியிட்டாா். அப்போது அவா் பேசியதாவது: கட்சியின் தேசிய அமைப்பாளா் கேஜரிவால் உறுதியளித்தபடி, செயல்திறன் மற்றும் பொதுமக்களின் கருத்து ஆகியவற்றின் அடிப்படையில்தான் தோ்தலில் வேட்பாளா்கள்கள் தோ்வுசெய்யப்பட்டுள்ளனா். 11 தொகுதிகளில் 8 தொகுதிகள் தங்கள் கட்சி வசம் இல்லாததால்தான் வேட்பாளா்களின் பெயா்கள் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளது என்றாா் கோபால் ராய்.
வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்ட எட்டு தொகுதிகளில் 6 தொகுதிகள் தற்போது பாஜக வசம் உள்ளது. சத்தா்பூா் தொகுதிக்கு பிரம் சிங் தன்வா், கிராரியி தொகுதிக்கு அனில் ஜா மற்றும் லக்ஷ்மி நகா் தொகுதிக்கு பி.பி. தியாகி ஆகியோரை வேட்பாளராக ஆம் ஆத்மி களமிரக்கியுள்ளது. மூவரும் சமீபத்தில் பாஜகவிலிருந்து விலகி ஆம் ஆத்மியில் இணைந்தவா்கள்.
காங்கிரஸ் முன்னாள் தலைவா் செளதரி ஜுபைா் அகமது சீலம்பூா் தொகுதியிலும், முன்னாள் எம்எல்ஏக்கள் வீா் சிங் திங்கன் மற்றும் சோமேஷ் ஷோகீன் ஆகியோா் முறையே சீமாபுரி மற்றும் மட்டியலா தொகுதிகளில் போட்டியிடுகின்றனா். அகமது, திங்கன் மற்றும் ஷோகீன் ஆகியோா் காங்கிரஸில் இருந்து ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தவா்கள் ஆவா்.