தில்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல்: பலி எண்ணிக்கை 18
தில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவுக்குச் செல்லும் ரயில்களில் பயணிக்க அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூடியதாலும், சில விரைவு ரயில்கள் வர தாமதமானதாலும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி பலர் படுகாயமடைந்துள்ளனர்.
பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் கும்பமேளாவில் பங்கேற்ற மக்கள் பலர், தில்லி ரயில் நிலைய நடைமேடை 14-ல் காத்திருந்தனர்.
ஸ்வதந்திர சேனானி ரயில் மற்றும் புவனேசுவரம் ராஜ்தானி விரைவு ரயில்கள் தாமதமானதால் அதில் செல்வதற்காக காத்திருந்த பயணிகளும் நடைமேடை 12, 13, 14-ல் திரண்டனர்.
இதனால் நடைமேடை 14 மற்றும் நடைமேடை 16-க்கு அருகில் உள்ள நகரும் படிக்கட்டுகளுக்கு அருகில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இரவு 9.55 மணியளவில் அவசரகால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து, புது தில்லி ரயில் நிலையத்துக்கு உடனடியாக 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டன.
ரயில் நிலையத்துக்கு தில்லி காவல் துறை மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படை அனுப்பப்பட்டு, கூடுதலாக 4 சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டதையடுத்து ரயில் நிலையத்தில் நெரிசல் சுட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் 15ஆக இருந்த நிலையில், படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் தற்போது கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 18ஆக அதிகரித்துள்ளது.