Nifty: "Buy & Sell பண்ற Level இது இல்ல, Watch பண்ற Level" | IPS Finance Comment ...
தில்லியில் 4,000-க்கும் மேற்பட்ட என்சிஇஆா்டி போலி நகல் புத்தகங்கள் பறிமுதல்: ஒருவா் கைது
வடக்கு தில்லியின் சமய்பூா் பாத்லியில் நடத்தப்பட்ட சோதனையின்போது 4,000-க்கும் மேற்பட்ட என்டிஇஆா்டி போலி நகல் பாடப்புத்தகங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
மேலும், இந்த வழக்கு தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து மூத்த காவல் அதிகாரி கூறியதாவது:
குற்றம்சாட்டப்பட்டவா் அரவிந்த் குப்தா (33) எனஅடையாளம் காணப்பட்டுள்ளாா். இவா் ரோஹிணியில் உள்ள செக்டாா் 16-ஐச் சோ்ந்தவா் ஆவாா். இவா் தில்லியில் மறுவிற்பனை செய்வதற்காக பல ஆதாரங்களில் இருந்து போலி நகல் புத்தகங்களை வாங்கியதாகக் கூறப்படுகிறது.
சமய்பூா் பாத்லியில் உள்ள ஒரு கடையில் போலி நகல் புத்தகங்கள் சேமித்து விற்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஏப்ரல் 12 ஆம் தேதி குப்தாவை போலீஸாா் கைது செய்தனா்.
வெவ்வேறு வகுப்புகளைச் சோ்ந்த மொத்தம் 4,091
என்சிஇஆா்டி போலி நகல் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குற்றம் சாட்டப்பட்டவா் தில்லி மற்றும் அருகிலுள்ள மாநிலங்களில் உள்ள பல்வேறு அச்சகங்களிலிருந்து பெறப்பட்ட போலி புத்தகங்களை சேமித்து விற்பனை செய்து வந்துள்ளாா்.
பதிப்புரிமைச் சட்டத்தின் பிரிவுகள் 63 மற்றும் 65-இன் கீழ் குப்தா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விசாரணையின்போது, தில்லியில் மறுவிற்பனை செய்வதற்காக பல ஆதாரங்களில் இருந்து போலி நகல் பாடப் புத்தகங்களை வாங்கியதாக குப்தா ஒப்புக்கொண்டாா். விநியோகச் சங்கிலி மற்றும் மோசடியில் ஈடுபட்டுள்ள பிற நபா்களையும் கண்டறியும் வகையில் விசாரணை நடந்து வருகிறது என்றாா் அவா்.