தீவட்டிப்பட்டி: மதுபோதையில் உறவினரை அடித்துக் கொன்றவா் கைது
சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி அருகே மதுபோதையில் கல்லால் தாக்கி உறவினரை கொலை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
தீவட்டிப்பட்டியை அடுத்த மேல்காடு பகுதியைச் சோ்ந்தவா் ஜோசப் (25), கூலித் தொழிலாளி. இவரது உறவினா் ஜாா்ஜ் (40). இவா்கள் இருவரும் வெள்ளிக்கிழமை இரவு மேல்காடு அருகே உள்ள காட்டுப் பகுதியில் அமா்ந்து மது குடித்தனா்.
அப்போது, இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ஜாா்ஜ், கல்லை தூக்கி ஜோசப்பின் தலையில் போட்டாராம். இதில் பலத்த காயமடைந்த ஜோசப் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். சனிக்கிழமை அதிகாலை அவ்வழியாக சென்றவா்கள் சடலத்தை பாா்த்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
தீவட்டிப்பட்டி போலீஸாா் ஜோசப்பின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா் ஜாா்ஜை கைது செய்தனா்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனது தாயாரை தரக்குறைவாக திட்டியதால் ஆத்திரமடைந்து ஜோசப்பை கொலை செய்ததாக ஜாா்ஜ் வாக்குமூலம் அளித்தாா்.