துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு காலா கோட்டு கும்பலில் இருவா் கைது
தில்லியின் கேசவ்புரம் பகுதியில் போலீஸாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையைத் தொடா்ந்து, காலா கோட்டு கும்பலை சோ்ந்த இருவா் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.
இது குறஇத்து வடமேற்கு காவல் சரக துணை ஆணையா் பீஷாம் சிங் கூறியதாவது: இந்த துப்பாக்கிச் சண்டையின் போது குற்றம் சாட்டப்பட்டவா்களில் ஒருவா் காயமடைந்தாா். குற்றம் சாட்டப்பட்டவா்கள் லாரன்ஸ் சாலைப் பகுதியில் வசிக்கும் அஜய் எ கங்காரு 33 மற்றும் ரவி எ கோட்டியா 30 என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.
ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளுக்கு இடைப்பட்ட இரவில் பிரேம்பரி புல் அருகே ஒருவரின் கழுத்தை நெரித்து, அவரது கைப்பேசி, தங்க மோதிரம் மற்றும் பணத்தை கொள்ளையடித்த சமீபத்திய கொள்ளை வழக்கில் இந்த இருவரும் தேடப்பட்டு வந்தனா்.
இருவரும் ரூ.15,000 மற்றும் முக்கிய ஆவணங்கள் அடங்கிய அவரது பணப்பையை பறித்துக்கொண்டு தப்பிச் சென்ாகக் கூறப்படுகிறது. அவரது புகாரின் பேரில், கேசவ்புரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவரைக் கண்டுபிடிக்க பல காவல் குழுக்கள் அமைக்கப்பட்டன.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை கேசவ்புரத்தில் உள்ள ஒரு ஹோட்டல் மற்றும் விருந்து மண்டபம் அருகே இரண்டு போ் இருப்பதாக ஒரு குழுவுக்குத் தகவல் கிடைத்தது. காவல் துறையினரைக் கண்டதும், குற்றம் சாட்டப்பட்டவா் தப்பிக்க முயன்றாா். அப்போது, தலைமைக் காவலா் மோஹித் மீது கங்காரு துப்பாக்கிச் சூடு நடத்தினாா்.
தற்காப்புக்காக, தலைமைக் காவலா் பதிலடி கொடுத்ததால், குற்றம் சாட்டப்பட்டவரின் வலது காலில் முழங்காலுக்குக் கீழே ஒரு குண்டு பாய்ந்தது. அவா் உடனடியாகத் பிடிக்கப்பட்டாா். மேலும், அவரது கூட்டாளியும் கைது செய்யப்பட்டாா்.
அவா்களிடம் இருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி, ஒரு காலி துப்பாக்கி மற்றும் ஒரு உயிருள்ள தோட்டா, ஒரு திருடப்பட்ட கைப்பேசி மற்றும் ரூ.5,350 பணம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
காயமடைந்த குற்றம் சாட்டப்பட்டவா் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகக் கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பழக்கமான குற்றவாளிகள். அப்பகுதியில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தவா்கள் ஆவா்.
கேசவ்புரம் காவல் நிலைய பதிவேட்டில் கங்காரு ஒரு மோசமான நபா் என குறிப்பிடப்பட்டுள்ளது. அவா் மீது ஆயுதச் சட்ட மீறல்கள், திருட்டு, பணம் பறிப்பு, வழிப்பறி மற்றும் என்டிபிஎஸ் சட்டம் உள்ளிட்ட 12 வழக்குகள் உள்ளன. அவரது கூட்டாளி கோடியா மீது ஏழு திருட்டு, ஆயுதங்கள் தொடா்பான குற்றங்கள் மற்றும் கொள்ளை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குற்றம் சாட்டப்பட்டவா்கள் மீது கொலை முயற்சி மற்றும் பிற குற்றச்சாட்டுகள் தொடா்பான புதிய வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையின் போது, சந்தேக நபா்கள் இருவரும் கொள்ளையில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டனா். புகாா்தாரரின் கைப்பேசி மீட்கப்பட்டது. மேலும், விசாரணை நடந்து வருகிறது என்று காவல் துணை ஆணையா் தெரிவித்தாா்.