துரைமுருகனுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!
அமைச்சர் துரைமுருகன், அவரது மனைவிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006 முதல் 2011-ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சிக் காலத்தில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அமைச்சர் துரைமுருகன், அவரது மனைவி சாந்தகுமாரி மீது கடந்த 2011-இல் ஊழல் தடுப்பு துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம், வழக்கில் இருந்து இருவரையும் விடுவித்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து ஊழல் தடுப்பு மற்றும் ஒழிப்புத் துறை போலீஸார் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், வேலூர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து, சென்னையில் உள்ள எம்.பி., எம்எல்ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.
கடந்த 2024-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி, இந்த வழக்கின் விசாரணையை வேலூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி, அமைச்சர் துரைமுருகன், அவரது மனைவி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த சென்னை சிறப்பு நீதிமன்றம், இருவருக்கு எதிராக பிடி ஆணை பிறப்பித்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் துரைமுருகன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமாா் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது துரைமுருகன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.வில்சன், சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து கடந்த 2017-ஆம் ஆண்டு, அமைச்சா் துரைமுருகன் அவரது மனைவி சாந்தகுமாரி ஆகியோா் விடுவிக்கப்பட்டனர். வேலூர் நீதிமன்றத்தில் இருந்து இந்த வழக்கு சென்னைக்கு மாற்றப்பட்டது.
2024-ஆண்டு பிறப்பித்துள்ள அரசாணையின்படி இதுபோன்ற வழக்குகளை அந்தந்த மாவட்ட நீதிமன்றத்துக்குத்தான் மாற்ற வேண்டும். மனுதாரருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பிடி ஆணையை அமல்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று வாதிட்டார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு ஊழல் தடுப்பு மற்றும் ஒழிப்புத் துறை போலீஸார் பதிலளிக்க உத்தரவிட்டு, சொத்துக் குவிப்பு வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராவதிலிருந்து துரைமுருகன், அவரது மனைவி சாந்தகுமாரிக்கு விலக்கு அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் துரைமுருகன் மற்றும் அவருடைய மனைவி ஆகிய இருவரையும் விடுவித்த வேலூர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இன்று(செப். 22) இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து, ஊழல் தடுப்பு மற்றும் ஒழிப்புத் துறை போலீஸார் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிக்க: அனுமதி இல்லாத செய்திகளை வெளியிடக் கூடாது! ஊடகவியலாளர்களுக்கு பென்டகன் கட்டுப்பாடு!