துலாம்: `திடீர் யோகம், சுபகாரியம்' - ராகு கேது தரும் பலன்கள்
உங்கள் ராசிக்கு, (வாக்கியப் பஞ்சாங்கப்படி) ஏப்ரல் 26 முதல் ராகு பகவான் 5-ம் இடத்திலும், கேது பகவான் உங்கள் ராசிக்கு 11-ம் இடத்திலும் நின்று பலன் தருகிறார்கள். இந்த ராகு- கேது பெயர்ச்சிக் காலத்தில், ராகு சிற்சில சவால்களை அளித்தாலும் கேதுவின் அருளால், எதையும் சாதிக்கும் வல்லமை உண்டாகும்.
ராகு பகவான் தரும் பலன்கள்
1. சொந்தபந்தங்களிடம் அதிகம் உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். அவர்களுடன் வீண் வாக்குவாதமும் வேண்டாம். அதேபோல், வாய்க்கால் வரப்புப் பிரச்னைகள் போன்றவற்றைப் பேசித் தீர்க்கப் பாருங்கள். விட்டுக்கொடுத்தால் கெட்டுப்போக மாட்டீர்கள்.
2. கணவன்-மனைவிக்குள் சந்தோஷம் நிலைக்கும். என்றாலும் தேவையற்ற சந்தேகங்களைத் தவிர்ப்பது அவசியம். பிள்ளைகளின் வருங்காலம் கருதிக் கொஞ்சம் சேமிக்கவும் செய்வீர்கள். அவர்களின் உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அநாவசியமாக மூக்கை நுழைக்க வேண்டாம்.
3. மகனின் கல்வி, வேலை, ஆரோக்கியத்திலும் சற்றுக் கவனம் செலுத்துங்கள். தெய்வ வழிபாடுகளில் மனதைச் செலுத்துங்கள். மனச் சஞ்சலங்கள் நீங்கும். மற்றபடி வீட்டில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.

4. கர்ப்பிணிகள் நெடுந்தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. அவர்கள், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எவ்வித மருந்துகளையும் உட்கொள்ள வேண்டாம். ஆன்மிகவாதிகள், கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும்.
5. வியாபாரிகளுக்குப் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். கடையை நவீனமயமாக்குவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்குத் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பு உண்டாகும். கலைத் துறையினருக்கு, வீண் பழிகள் நீங்கும்; வாய்ப்புகள் வந்து சேரும்.
கேது பகவான் தரும் பலன்கள்
6. உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமாகிய 11-ம் இடத்தில் வந்து அமர்கிறார் கேது. பல வகைகளிலும் திடீர் யோகங்கள் ஏற்படும். அடுத்தடுத்து சுப காரியங்கள் நடக்கும். உறவினர்கள் உங்களின் வளர்ச்சியைப் பார்த்து வியப்பார்கள். சொந்த ஊரில் அந்தஸ்து கூடும். அலைச்சல் வந்தாலும் நினைத்ததை முடிப்பீர்கள்.
7. சகோதர வகையில் சுபச் செலவுகள் உண்டு. சொத்து விஷயங்களில் இழுபறி நிலை மாறும். பிரார்த்தனைகள் நிறைவேறும். எனினும், சில நேரங்களில் பழைய கடனை நினைத்து நிம்மதி இழப்பீர்கள். உங்கள் பேச்சில் தெளிவு பிறக்கும். மறைமுக எதிரிகள் அடங்குவார்கள்.

8. வியாபாரத்தை மாற்றியமைப்பீர்கள். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். பங்குதாரர்களை மாற்றுவீர்கள். வெளிநாட்டில் இருப்பவர் களால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் வீண்பழி நீங்கும். சிலருக்கு, எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு.
9. நீங்கள், பாம்பணையில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாளை வழிபடுவது விசேஷம். ஒருமுறை, திருவரங்கத்தில் கோயில் கொண்டிருக்கும் ரங்கநாதரையும், தாயாரையும் வணங்கி வழிபட்டு வாருங்கள்; வாழ்வில் வளம் பெருகும்.