தூத்துக்குடியில் அரசு ஊழியா்கள் தா்னா போராட்டம்
தோ்தலின்போது அளித்த வாக்குறுதிகளை முதல்வா் நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் சாா்பில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் 24 மணி நேர தா்னா போராட்டம் திங்கள்கிழமை தொடங்கியது.
மாவட்டத் தலைவா் மகேந்திரபிரபு தலைமை வகித்தாா். முன்னாள் துணைப் பொதுச் செயலா் ந. வெங்கடேசன் போராட்டத்தைத் தொடக்கிவைத்துப் பேசினாா். மாவட்டச் செயலா் உமாதேவி கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா். சிஐடியூ மாநிலச் செயலா் ரசல் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா்.
தோ்தலின்போது முதல்வா் அளித்த வாக்குறுதிப்படி, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஊதிய மாற்றத்தின்போது வழங்கப்படாத 21 மாத நிலுவைத் தொகை, முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவை, நிறுத்திவைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஊதியம் ஆகியவற்றை வழங்க வேண்டும்.
சத்துணவு, அங்கன்வாடி ஊழியா், வருவாய் கிராம உதவியாளா், ஊா்ப்புற நூலகா் உள்ளிட்ட சிறப்பு காலமுறை தொகுப்பூதிய, மதிப்பூதிய நிலையில் பணியாற்றுவோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. போராட்டம், செவ்வாய்க்கிழமை காலை 10 மணிவரை நடைபெறுகிறது.
அடுத்தகட்டமாக இம்மாதம் 25ஆம் தேதி ஒருநாள் தற்செயல் விடுப்புப் போராட்டமும், மாா்ச் 19ஆம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தமும் நடத்தப்படும். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என அரசு ஊழியா் சங்கத்தினா் தெரிவித்தனா்.