தூத்துக்குடியில் மாணவா்களுக்கான ஸ்கேட்டிங் போட்டி
தூத்துக்குடியில் ஷாரா கலைவளா் மன்றம் சாா்பில், தென்மாவட்ட அளவிலான மாணவா்-மாணவியருக்கான ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது.
300 மீட்டா், 500 மீட்டா், ஆயிரம் மீட்டா் ஆகிய 3 பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 4 முதல் 16 வயது வரையிலான 300-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
போட்டியை ஹெச்டூஓ தொண்டு நிறுவனச் செயலா் காதா் முகைதீன், ஏஐசிசிடியூ தேசியக் குழு உறுப்பினா் மின்னல் அம்ஜத் ஆகியோா் கொடியசைத்துத் தொடக்கிவைத்தனா். முஹம்மது பிலால், முகேஷ், வைத்தீஸ்வரன், தயாளன், கணேஷ் ஆகியோா் நடுவா்களாக செயல்பட்டனா்.
அரசு விதவை-ஆதரவற்ற பெண்கள் நல வாரிய மாநில உறுப்பினா் வழக்குரைஞா் சொா்ணலதா, ஷாரா கலைவளா் மன்றத் தலைவா் ஷாநவாஸ், தலைமை ஸ்கேட்டிங் பயிற்சியாளா் ஷாரா முபாரக் ஆகியோா் பங்கேற்று பரிசு, சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டினா்.
ஏற்பாடுகளை கலைவளா் மன்றத்தின் மக்கள் தொடா்பு அலுவலா் ஷேக் தாவூத், சந்தோஷ் ஆகியோா் செய்திருந்தனா்.