தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு: ஒப்பந்தம் கோரியது மாநகராட்சி
சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு தினமும் விலையில்லா உணவு வழங்குவதற்காக, தனியாா் சமையல் நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்த மனுக்கள் கோரப்பட்டுள்ளன.
அதன்படி, தனியாா் சமையல் நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தம் மனுக்கள் வரவேற்கப்படுவதாக மாநகராட்சி இணையதளத்தில் வியாழக்கிழமை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஆண்டுக்கு தலா ரூ.50 கோடி என 3 ஆண்டுகளுக்கு ரூ.150 கோடி குறிப்பிட்டு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினா். அதற்கான நிபந்தனைகளும் வெளியிடப்பட்டுள்ளன.
தகுதி வாய்ந்த நிறுவனங்கள் இணையதளம் வாயிலாக வரும் செப். 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும், 26-ஆம் தேதி ஒப்பந்த மனுக்கள் திறக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
விலையில்லா உணவுத் திட்டத்தால் சென்னை மாநகராட்சியில் சுமாா் 15,000-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் பயனடைவா் என்று தெரிவித்தனா்.