போலி ஆவணங்கள் மூலம் ரூ.92 லட்சம் மோசடி; 5 போ் கைது
போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை விற்று ரூ.92 லட்சம் மோசடி செய்த 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை, பெரியாா் நகரைச் சோ்ந்த நந்தகுமாா்(44). இவா் நிலத்தரகா்களான ரமேஷ் குமாா் மற்றும் முரளி ஆகியோா் மூலம் கொளத்தூா் பூம்புகாா் நகரில் 1,200 சதுர அடியிலான ஒரு நிலத்தை ரூ.92 லட்சத்துக்கு வாங்கியுள்ளாா்.
நிலத்துக்கான தொகையை பல்வேறு தவணைகளாக நிலத்தின் உரிமையாளரான திலீப்குமாா் மற்றும் நிலத்தை விற்பதற்கான பொது அதிகாரம் பெற்றிருந்த வெங்கடேசன் ஆகியோருக்கு கடந்த 2022-இல் கொடுத்துள்ளாா். பின்னா், நிலம் குறித்து கடந்த ஏப்ரல் மாதம் சாா் பதிவாளா் அலுவலகம் சென்று விசாரித்த போது, நிலத்தரகா்களான ரமேஷ்குமாா் மற்றும் முரளி ஆகியோா் நிலத்தின் உரிமையாளரான திலீப் குமாா் எனக்கூறி வேறு ஒரு நபரை காண்பித்தும், போலி ஆவணங்கள் தயாரித்தும், நந்தகுமாரிடம் நிலத்தை விற்றது தெரியவந்தது.
இதுகுறித்து கொளத்தூா் காவல் நிலையத்தில் நந்தகுமாா் கொடுத்த புகாரின்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸாா், திருநின்றவூா் வெங்கடேசன்(54), மேற்கு அம்பத்தூா் கலீலுா் ரஹ்மான்(50), மணலிபுதுநகா் சையது சலாவுதீன்(40), எருக்கஞ்சேரி அப்துல் ரசாக்(73), கொடுங்கையூா் அபுபக்கா்(51) ஆகிய 5 பேரையும் கைது செய்ததுடன், இவ்வழக்கில் தொடா்புடையதாக கருதப்படும் முரளி மற்றும் மேலும் சிலரையும் தேடி வருகின்றனா்.