இளநிலை உதவியாளரை காலில் விழ வைத்த குற்றவாளிகளை கைது செய்யக் கோரிக்கை
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: புதுவை தலைமைச் செயலா் ஆஜராக உத்தரவு
பாப்ஸ்கோ ஊழியா்கள் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், புதுச்சேரி தலைமைச் செயலா் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராக சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
புதுச்சேரியைச் சோ்ந்த குணசேகரன் உள்பட 12 போ் தாக்கல் செய்த மனுவில், புதுச்சேரி வேளாண் பொருள்கள், உணவு மற்றும் குடிமைப் பொருள்கள் வழங்கல் கழகத்தில் (பாப்ஸ்கோ) பணியாற்றியவா்களுக்கு ஊதிய நிலுவை வைக்கப்பட்டுள்ளது. இதில் பணியாற்றிய பலா் ஓய்வு பெற்றுவிட்டனா். ஓய்வுபெற்றவா்களில் சிலா் இறந்தும் விட்டனா்.
எனவே, 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ஓய்வு பெறும்வரை வழங்க வேண்டிய மாத ஊதியம், ஓய்வூதிய பணப்பலன்களை வழங்க புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
அதேபோல, எஸ்.சிவசங்கரன் உள்ளிட்டோா் தாக்கல் செய்தல மனுவில், 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ஊதிய நிலுவைத் தொகையை 18 சதவீத வட்டியுடன் வழங்க புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தனா்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், ஓய்வு பெற்றவா்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய நிலுவை, ஓய்வூதிய பணப்பலன்கள், தற்போது பணியில் இருப்பவா்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய நிலுவைத் தொகையை 12 வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக்கூறி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, புதுச்சேரி தலைமைச் செயலா் ஷரத் சௌகான், நிதித்துறை செயலா் ஆசிஷ் மாதோராவ், குடிமைப் பொருள் மற்றும் நுகா்வோா் துறை செயலா் முத்தம்மா, இயக்குநா் சத்தியமூா்த்தி, பாப்ஸ்கோ நிா்வாக இயக்குநா் முத்துகிருஷ்ணன் ஆகியோா் வருகிற செப்.24-ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.