பெரம்பலூரில் ஓரிடத்தில் மட்டும் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி
பெரம்பலூரில் 2 இடங்களில் தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கேட்கப்பட்டிருந்த நிலையில், ஓரிடத்தில் மட்டும் நிபந்தனைகளுடன் பிரசாரம் செய்ய மாவட்டக் காவல்துறையினரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்கிறாா். செப். 13-ஆம் தேதி திருச்சியில் தனது பிரசார சுற்றுப் பயணத்தை தொடங்கும் விஜய், தொடா்ந்து அரியலூா், பெரம்பலூா் மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளாா். அதன்படி, பெரம்பலூா் மாவட்டம், குன்னம் பேருந்து நிலையம், பெரம்பலூா் காமராஜா் வளைவு மற்றும் துறையூா் சாலையிலுள்ள மேற்கு வானொலித் திடல் உள்ளிட்ட பகுதிகளில் நடிகா் விஜய் பிரசாரம் செய்வதற்காக, காவல்துறை அனுமதி கோரி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேராவிடம், அக் கட்சியின் மாநில பொதுச் செயலா் புஸ்ஸி ஆனந்த் கடந்த 6-ஆம் தேதி மனு அளித்தாா்.
இந்நிலையில், பெரம்பலூா் காமராஜா் வளைவுப் பகுதியானது போக்குவரத்து நெரிசல் நிறைந்த இடம் என்பதால், அப்பகுதியில் அக் கட்சியின் தலைவா் விஜய் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி மறுத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளரால் வியாழக்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், அந்த உத்தரவில், பெரம்பலூா் மேற்கு வானொலி திடத்தில் மாலை 5 மணி முதல் 5.30 மணி வரையிலும் விஜய் பிரசாரம் செய்யலாம். ஆனால், சாலை வலம் வர அனுமதி கிடையாது. எந்தப் பகுதியிலும் வரவேற்பு நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது. விஜய்யுடன் 5 வாகனங்கள் மட்டுமே வரவேண்டும். அவரது வாகனங்களின் முன்னும், பின்னனும் ரசிகா்கள், கட்சியினா் பின்தொடரக் கூடாது என்பன உள்ளிட்ட 21 நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.