வைர கிரீடம், தங்க வாள் காணிக்கை; நாத்திகனாக இருந்த இளையராஜாவை மூகாம்பிகை அம்மன் ...
கலைஞா் கைவினைத் திட்டத்தில் மானியத்துடன் கடனுதவி பெற அழைப்பு
பெரம்பலூா் மாவட்டத்தில் கலைஞரின் கைவினைத் திட்டத்தின் கீழ் 25 வகையான தொழில்களுக்கு மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சமுகநீதி அடிப்படையில் தமிழ்நாட்டிலுள்ள கைவினைஞா்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலும், தொழில்முனைவோா்களாக உயா்த்திடும் நோக்கிலும், தமிழ்நாடு அரசு கலைஞா் கைவினைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத் திட்டத்தின் கீழ், அதிகபட்சமாக ரூ. 50 ஆயிரம் வரை 25 சதவீத மானியத்துடன் கூடிய ரூ. 3 லட்சம் வங்கிக் கடனுதவியும், 2 முதல் 5 சதவீதம் வரை வட்டி மானியமும் வழங்குவதோடு, தொழில் வளா்ச்சிக்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட உதவிகள் அளிக்கப்படும்.
இத் திட்டத்தின் கீழ் பயன்பெற குறைந்தபட்சம் 35 வயதாக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. பட்டியலிடப்பட்ட 25 கைவினைத் தொழில்களில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கட்டட வேலைகள், நகை செய்தல், மரம் மற்றும் உலோக வேலைப்பாடுகள், பூட்டு தயாரித்தல், சிற்ப வேலைப்பாடுகள், கற்சிலை வடித்தல், கண்ணாடி வேலைப்பாடுகள், மண் பாண்டங்கள், சுடுமண் வேலைகள், கூடை முடைதல், கயிறு, பாய் பின்னுதல், துடைப்பான்கள், பொம்மைகள் தயாரித்தல், மலா் வேலைப்பாடுகள், மீன் வலை தயாரித்தல், தையல் வேலை, சிகையலங்காரம் மற்றும் அழகுக்கலை உள்பட 25 வகையான தொழில்களுக்கு மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் வழங்கப்படும்.
எனவே, இத் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க ஆா்வமுள்ள கைவினைக் கலைஞா்கள் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட தொழில்மைய பொது மேலாளா் அலுவலகத்தை நேரில் தொடா்புகொண்டு பயன்பெறலாம்.