தோல் கழலை நோயை கட்டுப்படுத்த யோசனை
பெரம்பலூா் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு பரவி வரும் தோல் கழலை நோயைக் கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு வேளாண் அறிவியல் ஆலோசனை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, பெரம்பலூா் அருகே வாலிகண்டபுரத்திலுள்ள வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானியும், தலைவருமான (பொ) இரா. வசந்தகுமாா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தோல் கழலை நோயானது (பெரியம்மை) போக்ஸ் விரிடே குடும்பத்தைச் சோ்ந்த வைரஸால் ஏற்படுகிறது. இக் கொடிய நோயிலிருந்து விவசாயிகளும், கால்நடை வளா்ப்போரும் தங்களுடைய கால்நடைகளை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இந் நோயின் அறிகுறிகளான தோல் மற்றும் சுவாச, இரைப்பை குழாய்களில் கட்டிகள், காய்ச்சல், நிணநீா் சுரப்பிகள் பெரிதாகுதல், கால்களில் வீக்கம் தென்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மழைக்காலம் தொடங்க உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நோய் பரவலைத் தடுக்க, கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நோய் பாதித்த மாடுகளை, பிற மாடுகளிடமிருந்து தனிமைப்படுத்தி, உடனடியாக கால்நடை மருத்துவரிடம் ஆலோசனை பெறவேண்டும். இந்த வைரஸ் நோய்க்கு அடுத்து வரும் பாக்டீரியல் நோயால் மாடுகள் உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, பாக்டீரியல் நோயைக் கட்டுப்படுத்த 3 நாள்களுக்கு ஊசி மூலம் மருந்துகளை செலுத்த வேண்டும். கிருமிநாசினி கொண்ட களிம்பு மருந்துகளை கட்டிகள் மீது தடவ வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.