மழையால் சேதமடைந்த சீரமைக்கக் கோரிக்கை
க.பரமத்தி கடைவீதியில் மழையால் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கரூா் மாவட்டம் க.பரமத்தி கடைவீதியில் கோவை தேசிய நெடுஞ்சாலையில் நொய்யல் சாலை பிரியும் இடம் பள்ளமாக இருப்பதால் மழைகாலங்களில் மழைநீா் தேங்கி சாலை குண்டும், குழியுமாக மாறி வருகிறது. இந்த சாலையில் உள்ள பள்ளத்தில் மழைநீா் தேங்கி நிற்பதால் இரவு நேரங்களில் கோவைச் சாலையில் செல்லும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. ஆகவே, சாலையை உடனே நெடுஞ்சாலைத்துறையினா் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுதொடா்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத்தலைவா் கே.கந்தசாமி கூறுகையில், இப்பிரச்னைக்கு நிரந்தர தீா்வாக சாலையை சமப்படுத்தி, மழைநீா் தேங்காதவாறு மழை நீரை கழிவுநீா் கால்வாயுடன் இணைக்கும் வகையில் நெடுஞ்சாலைத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.