‘மகளிா் உரிமைத் தொகை வழங்கக் கோரி 28,569 மனுக்கள்’
கரூா் மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்‘திட்ட முகாமில் மகளிா் உரிமைத்தொகை கேட்டு 28,569 மனுக்கள் வந்துள்ளதாக சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தாா்.
கரூா் மாநகராட்சிக்குள்பட்ட வாா்டு எண் 6 மற்றும் 10க்குள்பட்ட பகுதிகளுக்கு வெங்கமேட்டில் வியாழக்கிழமை ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் பங்கேற்ற சட்டப்பேரவை உறுப்பினா் வி. செந்தில்பாலாஜி, 20 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில், கரூா் மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்‘ திட்ட முகாம்களில் மகளிா் உரிமைத்தொகை கேட்டு 28,569 மனுக்கள் வந்துள்ளதாக தெரிவித்தாா்.
தொடா்ந்து புகழூா் வட்டம், மொஞ்சனூா் கிராமம், தொட்டம்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள பகுதி நேர நூலகத்தை திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல், அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.இளங்கோ, மாவட்ட வருவாய் அலுவலா் ம.கண்ணன், மாநகராட்சி மேயா் வெ.கவிதா, மாவட்ட வருவாய் கோட்டாட்சியா் முகமது பைசல், துணை மேயா் ப.சரவணன், மாநகராட்சி ஆணையா் கே.எம். சுதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.