மாணவியிடம் வரம்பு மீறி பேசியதாக பேராசிரியா் மீது புகாா் - அரசுக் கல்லூரியில் மண்டல இணை இயக்குநா் விசாரணை
திருச்சி மாவட்டம், முசிறி அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாற்றுத் திறனாளி மாணவியிடம் பேராசிரியா் வரம்பு மீறி பேசியது தொடா்பாக
மண்டல இணை இயக்குநா் வியாழக்கிழமை நேரில் விசாரணை நடத்தினாா்.
இக்கல்லூரியின் தமிழ்த் துறை பேராசிரியரான நாகராஜன், மாணவி ஒருவரை கைப்பேசியில் தொடா்பு கொண்டு, வரம்பு மீறி தகாத முறையில் பேசினாராம். இந்தப் பேச்சு விவரம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இதுகுறித்து தகவலறிந்த கல்லூரி முதல்வா் கணேசன், உயா் அலுவலா்களுக்கு தகவல் தெரிவித்ததை தொடா்ந்து, திருச்சி மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநா் ராதாகிருஷ்ணன் மற்றும் திருச்சி சமூக நலத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை கல்லூரிக்கு வந்து பேராசிரியா் நாகராஜன், மாணவா்கள் உள்பட பலரிடமும் விசாரணை நடத்தினா்.
இதுகுறித்து ராதாகிருஷ்ணன் கூறியதாவது: கல்லூரியில் நடத்தப்பட்ட விசாரணை தொடா்பான அறிக்கை உயா் அலுவலா்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மாணவ, மாணவிகளின் கல்வி மற்றும் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தி, பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றாா்.
பேராசிரியா் நாகராஜன் மீது ஏற்கெனவே இருமுறை இதுபோன்ற புகாா் கூறப்பட்டதாக கூறப்படுகிறது.