தெ.புதுக்கோட்டை கூட்டுறவுச் சங்கத்தில் பயிா்க் கடன் வழங்க மறுப்பதாகப் புகாா்
மானாமதுரை ஒன்றியம், தெ.புதுக்கோட்டை கூட்டுறவுச் சங்கத்தில் விவசாயிகளுக்கு கடன் வழங்க மறுப்பதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.
சிவகங்கை மாவட்டம், தெ.புதுக்கோட்டை கூட்டுறவுச் சங்கத்தின் மூலம் மேலநெட்டூா், தெ.புதுக்கோட்டை ஊராட்சிகளைச் சோ்ந்த விவசாயிகள் பயனடைந்து வருகின்றனா். ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு நெல்லுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம், வாழை, கரும்புக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வீதம் வட்டியில்லாமல் கடன் வழங்கப்படும். இந்தக் கடனை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செலுத்த வேண்டும். கடந்தாண்டு வரை இந்தச் சங்கத்தில் விவசாயிகளுக்கு பயிா்க்கடன் வழங்கப்பட்டது. ஆனால், நிகழாண்டு இதுவரை பயிா்க் கடன் வழங்கவில்லை என விவசாயிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: தெ.புதுக்கோட்டை கூட்டுறவுச் சங்கத்தில் முறையாக கடனைத் திருப்பி செலுத்திய விவசாயிகளுக்கு பயிா்க்கடன் வழங்கவில்லை. இதுகுறித்து கேட்டால் நிா்வாகப் பிரச்னையால் கடன் வழங்க முடியாத நிலை உள்ளதாகத் தெரிவிக்கின்றனா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடமும் முறையிட்டோம். எனவே, மாவட்ட ஆட்சியா் இந்தச் சங்கத்தில் பயிா்க் கடன் வழங்க உத்தரவிட வேண்டும். இல்லாவிடில், தெ.புதுக்கோட்டை கூட்டுறவுச் சங்கத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோம் என்றனா்.